ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு பேண்டின் பின் பாக்கெட்டில் பர்சை வைத்த அவள் கணவன் நந்தகோபால், "என்னிக்கு புடவைய அட்ஜஸ்ட் பண்ணி முடிப்பேனு சொல்லு, உள்ள போலாம்," என்றான்.
அவனை முறைத்துவிட்டு செருப்புகளைக் கழற்றும் போது, "அக்கா...." என்று பின்னால் குரல் கேட்க, திரும்பினாள். பாவாடை சட்டை அணிந்த பெண் ஒருத்தி கையில் கூடையுடன் நின்றிருந்தாள். அந்த கூடை முழுவதும் துளசி மாலைகள். அந்த பெண்ணிற்கு பன்னிரெண்டு, பதிமூன்று வயது இருக்கலாம்.
" பெருமாளுக்கு துளசி மாலை வாய்ங்கக்கா," துளசி மாலையை முழம் போட்டு காண்பித்தாள்.
" தாயாருக்கு தாமரை பூ வாய்ங்கக்கா," இன்னொரு பாவாடை சட்டை பெண் எங்கிருந்தோ திடீரென்று தோன்றினாள். முதலில் பார்த்த பெண் ஜாடையில் தான் இருந்தாள். ஆனால் அவளை விட வயதில் சின்னவளாய் தெரிந்தாள். அவள் வலது கையில் தாமரைப் பூ. இடது கையில் இருந்த மூங்கில் தட்டை இடுப்பில் ஒட்ட வைத்து பிடித்திருந்தாள். அந்த மூங்கில் தட்டில் பெரிதும் சிறிதுமாய் தாமரைப் பூக்கள்.
நந்தகோபால் மைதிலியின் பக்கத்தில் வந்து ரகசியமாய் சொன்னான்.
"பதினெட்டு வயசு பொண்ணுக்கு அம்மா நீ . உன்னை பாத்து மாமினு கூப்டாம அக்கானு கூப்படறா. கட்டாயமா இந்த பசங்ககிட்டேந்து நீ பூ வாங்கி தான் ஆகணும்."
"உங்கள கோவிலுக்கு கூட்டிண்டே வந்திருக்கக் கூடாது," என்று சொல்லிவிட்டு துளசி மாலையையும், தாமரைப் பூவையும் வாங்கிக் கொண்டாள்.
"நீங்க ரெண்டு பேரும் அக்கா, தங்கையா?" பர்ஸிலிருந்து பணத்தை எடுத்தபடியே கேட்டான் நந்தகோபால்.
"ஆமாம் சார்," என்றாள் துளசி மாலை விற்ற பெண். நந்தகோபாலிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டாள். தன் பங்கு பணத்தை சுருக்குப் பையில் போட்டுக் கொண்டு, தங்கையிடம் அவளுடைய பங்கை நீட்டினாள். அதுவும் ஒரு சுருக்குப் பையை அவிழ்த்து பணத்தைப் போட்டுக் கொண்டது.
"உள்ள கூட்டம் இருக்கா?"
"கூட்டம் இருக்கும். நீ டிக்கெட் வாய்ங்க்கினு போ சார்," சொல்லிவவிட்டு, "வாடி போலாம்," என்று தன் தங்கையை அழைத்துக் கொண்டு போனாள்.
அந்த பெண் சொன்னது போல் ஶ்ரீநிவாசர் சன்னதியில் கூட்டம் இருந்தது.
"நான் டிக்கெட் வாங்கிண்டு வரேன்," என்று கிளம்பினவனை தடுத்தாள் மைதிலி.
"எல்லா கோவில்லயும் டிக்கெட் வாங்கிண்டு ஈசியா போய் சேவிச்சுட்டு வந்துடறோம். ஒரு நாளைக்காவது கூட்டத்துல நின்னு சேவிப்போம்."
"நமக்கு முன்னாடி அட்லீஸ்ட் ஒரு இருவத்தஞ்சு பேராவது இருப்பா. ஹாஃப் அன அவர் ஆகும் நம்ம சேவிக்கறதுக்கு."
" இப்ப என்ன அவசரம்?
டிக்கெட் வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டு மைதிலியுடன் நிதானமாய் வரிசையில் நின்றான் நந்தகோபால். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து ஒரு வழியாக அவர்கள் சன்னதிக்குள் சென்றனர். வலது பக்கம் பெண்கள் வரிசையில் அவள் நிற்க, நந்தகோபால் இடது பக்கத்தில் ஆண்கள் வரிசையில் நின்று கொண்டான். ஶ்ரீ நிவாசர் நீல நிற பட்டு வஸ்த்திரத்தில் மனதைக் கொள்ளைக் கொண்டார். மல்லியும், துளசியும், சாம்ந்தியும் வஸ்த்திரத்தின் மேல் அழகாய் சாத்தப்பட்டிருந்தன. மைதிலி அர்ச்சகரிடம் துளசி மாலையைக் கொடுத்தாள். அவள் கொடுத்த துளசி மாலையையும் மற்றவர்கள் கொடுத்த புஷ்பங்களையும் பெருமாளுக்கு சாத்திவிட்டு, அர்ச்சகர் பெருமாளுக்கு தீபாராதனை காட்ட "கோவிந்தா, கோவிந்தா" என்று சிலர் கன்னத்தில் போட்டுக் கொண்டனர். தீபாராதனை தட்டுடன் அவர் ஒவ்வொருவரிடமும் வர, கற்பூரத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டு தட்டில் சில்லறைகளையும், நோட்டுகளையும் போட்டனர். நந்தகோபால் நூறு ரூபா தாள் ஒன்றைப் போட்டு விட்டு கைகளைக் கூப்பி பெருமாளை சேவித்தான். தீர்த்தம், சடாரி முடிந்து கூட்டம் கலைந்து செல்கையில், அர்ச்சகர் ஒரு பெரிய தேங்காய் மூடியையும், நான்கு வாழைப் பழங்களையும் நந்தகோபால் கையில் கொடுத்தார். அவைகளை கையில் பிடிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டே சன்னதியை விட்டு வெளியே வந்தான் நந்தகோபால்.
"இங்கயே நில்லுங்கோ. ஒரு நிமிஷத்துல வரேன்," என்று மாயமாய் மறைந்தாள் மைதிலி.
ஐந்து நிமிடங்களில் மீண்டும் தோன்றினாள். அவள் கையில் வெள்ளை நிறத்தில் ஒரு கட்டைப் பை. அதில் சிகப்பு நிறத்தில் "பத்மாவதி சமேத ஶ்ரீ நிவாசர் ஸ்வாமி தேவஸ்தானம்" என்று எழுதியிருந்தது.
"இங்க புக் கடைல வித்துண்டுருந்தான்," என்ற படியே பையை திறந்து காட்டினாள்.
மெதுவாக கையில் இருந்தவைகளை பையின் உள்ளே வைத்தான் நந்தகோபால். இருவரும் தாயார் சன்னதி நோக்கி நடக்கையில், "இது ரொம்ப மோசம்," என்றாள் மைதிலி.
"எது மோசம்?"
"நிறைய பேர் தட்டுல பத்து ரூபா, இருவது ரூபா போட்டா. அவாளுக்கு எல்லாம் கொஞ்சம் துளசிய கிள்ளிக் குடுத்துட்டு, நீங்க நூறு ரூபா போட்டதனால உங்களுக்கு மட்டும் அள்ளிக் குடுத்துட்டார் அந்த அர்ச்சக ஸ்வாமி."
"பெருமாள சேவிக்காம தட்டுல எல்லாரும் எவ்ளோ பைசா போடறானு பாத்துண்டு இருந்தயா?"
"பெருமாளையும் சேவிச்சேன், தட்டையும் பாத்தேன்."
தாயார் சன்னதியின் வரிசையில் நின்றார்கள்.
" பெருமாளுக்கு முன்னாடி எல்லாரும் சமம்னா, நூறு ரூபா போட்ட உங்களுக்கு கை நிறைய கொடுத்த மாதிரி எல்லாருக்கும் கொடுத்துருக்கணும். இல்லயா, பத்து ரூபா இருவது ரூபா போட்டவாளுக்கு ஒண்ணுமே கொடுக்காத மாதிரி உங்களுக்கும் ஒண்ணுமே கொடுத்திருக்கக் கூடாது. "
"என்ன தான் சொல்ல வர? தட்டுல பைசா....."
"பேசறதுனா பின்னால போய் பேசிட்டு வாங்க. கோவில்ல வந்து தொணதொணனு...."என்று நந்தகோபாலுக்கு பின்னாடி இருந்த பெரியவர் கூற, நந்தகோபால் வாயை மூடிக் கொண்டான்.
கூட்டம் நகர மைதிலியுடன் தாயார் சன்னதியின் உள்ளே சென்றான். கையில் இருந்த தாமரைப் பூவை அர்ச்சகரிடம் கொடுத்தாள் மைதிலி. அந்த புஷ்பத்தை தாயாரின் வலது திருக்கையில் அழகாய் வைத்தார். தீபாராதனை முடிந்து தட்டுடன் அர்ச்சகர் தட்டுடன் வர, நந்தகோபால் பர்சை குடைந்தான். எல்லாம் நூறு ரூபாய் நோட்டுகளாய் இருந்தன. சில்லறை காசுகள் நிறைய இருந்த போதிலும், அதை போடுவதற்கு அவன் மனம் ஒப்பவில்லை. நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்தான். மைதிலியைப் பார்த்தான். தயங்கியபடியே தட்டில் மெதுவாய் நூறு ரூபாயை வைத்தான். வந்தவர்கள் கலைந்து செல்ல அர்ச்சக ஸ்வாமி புஷ்பங்களையும், பழங்களையும் நந்தகோபால் கையில் கொடுக்க, நந்தகோபால் மீண்டும் திண்டாடியபடியே வெளியே வந்தான்.
"அந்த பைய காமி." மைதிலி பையைக் காண்பிக்க கையில் இருந்த எல்லாவற்றையும் உள்ளே வைத்தான்.
" கோவில்ல வந்து ரொம்ப பாலிடிக்ஸ் பண்ற. எனக்கு பைசா போடறதா வேண்டாமானே தெரியல."
"உங்களுக்கு பக்கத்துல இருந்தவர் இருவது ரூபா போட்டார். அவருக்கு ஒண்ணும் கொடுக்கல.
எங்க போனாலும் பைசா இருக்கறவனுக்கு தான் மதிப்பு. பெருமாளும் பைசா இருக்கறவாள தான் மதிக்கறார்."
ராமர் சன்னதியைப் பார்த்ததும் நந்தகோபால் பாண்ட் பாக்கெட்டில் இருந்த பர்சை உருவினான். அதிலிருந்த ஐந்து ரூபா நாணயத்தை அவளிடம் கொடுத்தான்.
"அம்மா தாயே, உன் கிட்ட சில்லறை இருந்தா தட்டுல போடு. இல்லனா இந்த இத போடு. என்னை ஆள விடு," என்றபடியே அவளிடம் ஐந்து ரூபாய் நாணயத்தைக் கொடுத்தான்.
ராமர் சன்னதியில் கூட்டம் இல்லை. ஆறு பேர் மட்டுமே இருந்தனர். அவர்களுடன் நின்று கொண்டு ராமரை சேவித்தார்கள். அர்ச்சகர் தட்டை ஒவ்வொருவரிடமும் காண்பித்துக் கொண்டிருக்க, ஐந்து ரூபாய் நாணயதைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டாள். இருந்த ஆறு பேரில் ஒருவர் கூட தட்டில் பைசா போடவில்லை. மைதிலிக்கு மனம் அடித்துக் கொண்டது. தான் மட்டும் போட்டால் தனக்கு ஏதாவது கொடுத்து விட போகிறார் என்று நினைத்து, அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை தட்டில் போடாமலே விட்டாள். தீர்த்தம், சடாரி முடிந்தது. அர்ச்சகர் கிள்ளிக் கொடுத்த துளசியை வாங்கும் போது அவள் கையில் இருந்த ஐந்து ரூபாய் நாணயம் "ட்ணங்" என்ற சத்தத்துடன் கீழே விழ்ந்து உருண்டு ஒடியது. கீழே குனிந்து நாணயத்தை தேடினாள். அது போன திசை தெரியவில்லை. நந்தகோபாலையம், மைதிலியையும் தவிர வந்திருந்தவர்கள் சன்னதியை விட்டு வெளியேற மீண்டும் தலையை குனிந்து நாணயத்தை தேடினாள் மைதிலி.
"உன் காலுக்கு கீழ இருக்கு பாருமா," என்றார் மைதிலியிடம் அர்ச்சகர்.
இருந்த இடத்திலிருந்து சற்று நகர்ந்து கீழே பார்த்தாள் மைதிலி. அவளின் ஐந்து ரூபாய் நாணயம் கீழே உட்கார்ந்திருந்தது. குனிந்து அதை எடுத்தாள்.
"ரொம்ப தாங்க்ஸ்," என்றாள் அர்ச்சகரிடம். நந்தகோபாலைப் பார்த்து தலையசைத்து "போலாம்" என்றாள். அவர்கள் வெளியே செல்ல எத்தனிக்கையில், "கொஞ்சம் இரும்மா" என்றார் அர்ச்சகர்.
ராமர் அணிந்திருந்த கதம்ப மாலையை எடுத்தார். சீதையின் பாதத்தில் இருந்த ரோஜா பூவை எடுத்தார். அங்கே தட்டில் இருந்த இரண்டு ஆரஞ்சு பழங்களையும் எடுத்துக் கொண்டு மைதிலியிடம் வந்தார். "இந்தாம்மா..." என்று அவளிடம் எல்லாவற்றையும் தந்தார். அவற்றை வாங்கிக் கொண்டாள். இந்த முறை ஐந்து ரூபாய் நாணயம் கீழே விழாமல் பத்திரமாய் அவள் கையில் இருந்தது.
No comments:
Post a Comment