விஸ்வரூபம் தடை- என் எண்ணங்கள்

நாள்தோறும் அடுப்பங்கறையில் அரிசிக்கும், பருப்புக்கும் நடுவில் வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கும்     பெண்ணாகிய எனக்கு, நல்ல மனம் செயல்படும் போது விஸ்வரூபம் பற்றி எழுந்த எண்ணங்களையும், நல்ல மனம் அல்லாத வேறொன்று செயல்படும்போது எழுந்த எண்ணங்களையும் சொல்லும் பதிவு இது.

நல்ல மனம் நினைப்பது:

"அடடா, ஒரு படம் எடுத்து விட்டு என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.  எத்தனை வகையான தடை.  , எழுத்துலகில் அனுபவமில்லாத கத்துக்குட்டியான நானே என் எழுத்தை பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவிட்டு, அதன் தலைவிதி என்ன, பிரசுரமாகுமா ஆகாதா என்று இராபகலாக துடிக்கும் எனக்கு, திரைப்படத் துரையையே கரைத்துக் குடித்து உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் அந்த மிகப் பெரிய கலைஞனின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்று நன்கு உணர முடிகிறது.  அவரின் உழைப்புக்கேற்ற ஊதியமாய் இந்த படம் தடைகளை மீறி வெளிவரவேண்டும்."

நல்ல மனம் அல்லாத ஒன்று நினைப்பது:

" அன்று தசாவதாரம் என்ற படம் எடுத்து, என் போல் கடவுள் மீது பற்றுக் கொண்டவர்களின் மனதைக் கலங்க அடித்தார்.  பல்லாயிரக்கான மக்கள் தினம் வணங்கிடும் தெய்வத்தை,  தன்  விருப்பப்படி  கையாண்டு  மனதைத் தவிக்கவிட்டார்.  அன்று அவர் கைகளில் மாட்டிக் கொண்டு கோவிந்தராஜன் அல்லல் பட்டபோது வாய் மூடி கண்ணீர் உகுத்தோமே தவிர, அந்த படத்தை எதிர்க்கவில்லை, தடை செய்யக் கோரவில்லை.  நானாக இருந்தாலும், யாராக இருந்தாலும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.  தசாவதாரம் என்ற முற்பகல் செயல், பிற்பகலில் விஸ்வரூபமாய் விளைந்திருக்கிறது.  கடவுள் இல்லை என்று சொல்பவர்,  தசாவதாரம், விஸ்வரூபம், ஹே ராம் என்று கடவுளுடன் தொடர்புடைய பெயர்களை தன் படத்துக்கு வைப்பானேன்,  கடவுளை துவம்சம் செய்து நம் மனதை புண் படுத்துவானேன்? விஸ்வரூபம்  வெளிவந்த பிறகாவது, அவரின் மனதால்,சொல்லால், செயலால், மற்றவர்களை காயப்படுத்துவதை தவிர்ப்பார் என்று நம்புவோம்.

சமீபத்தில் சென்னையில் நடந்த இரண்டு சம்பவம் பற்றி சொல்ல விரும்புகிறேன்.  முதலாவதாக , ஒரு முஸ்லீம் அன்பரின் கடையில் பொருள் வாங்கிய பிறகு, பணம் கொடுப்பதற்காக என் பையை துழாவிக் கொண்டிருந்த போது, சாலையில் நாதஸ்வர சத்தமும், மேளச் சத்தமும் கேட்டன.  அப்பொழுது அந்த அன்பர், "யம்மா.  உன் சாமி வருதுமா.  பைசா எங்கயும் போகாது.  உன் சாமிய பாத்துட்டு வந்து பணம் குடுமா," என்றார்.  நானும் விழுந்தடித்துக் கொண்டு என் சாமியைப் பார்க்க ஓடினேன்.  என் கண்கள் என் சாமியின் மீது இருந்தாலும், என் காதுகளில் அந்த முஸ்லீம் அன்பரின் சொல்லே ஒலித்துக் கொண்டிருந்தது.  என்னை மதித்து, என் கடவுளை மதித்து, என்னை அனுப்பி வைத்த அந்த அன்பர், அன்று என் நெஞ்சில் "விஸ்வரூபம்" எடுத்தார்.  மற்றொரு சம்பவம்.  தெருவில் வரும் மாடுகளுக்கு பயந்து ஒரு கடைக்குள் ஒதுங்கினேன்.  கடையின் பேர் பலகையைப் பார்த்தால் அது ஒரு முஸ்லீம் அன்பரின் கடை என்று தோன்றியது.  உள்ளே இருந்தவரோ நெற்றியில் இந்து மதச் சின்னங்களை தரித்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர்.  அந்த கடைக்கு வருவோர் போவோரிடமும், அடித்த தொலைப் பேசிகளுக்கும் சலிக்காமல் பதில் அளித்துக் கொண்டிருந்தார்:  "கடை முதலாளி தொழுகைக்கு போயிருக்கார்.  இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரரு".  மாடுகள் போன பின்னும் அவரையே வியந்து பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அந்தக் கடையின் முதலாளி வந்துவிட்டார்.  " ரொம்ப thanks sir," என்றார்.  அந்த நன்றியைக் காதில் வாங்கிக் கொண்டாரோ, இல்லையோ தெரியவில்லை.  கடையை விட்டுப் போகும் போது, "நாளைக்கும் இதே நேரத்துக்கு தானேடா தொழுகைக்கு போவ, நான் correctஆ  வந்துடறேன்," என்று சொல்லிக் கொண்டே போனார்.  இந்த உலகம் ரோஜாக் கூட்டங்களால் நிறைந்தது.  ரோஜாவைக் காண்பித்தால் பட்டாம்பூச்சிகளும், தேனீக்களும் சிறகடித்து வரும்.

கடைசியாக ஒன்று,  மற்றவர்களின் கடவுளையோ, மதத்தையோ, மொழியையோ குறை கூறுவதறுக்கு நமக்கு அதிகாரம் இல்லை.  கடவுள் இருக்கிறார் என்று நம்புபவர்கள், அவர் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று உணர்ந்து தவறு செய்யாமல் இருப்போம். கடவுள் இல்லை என்று நினைப்பவர்கள், நமமைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை, நம்மை நாமே தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்து தவறு செய்யாமல் இருப்போம்.


                                 

No comments:

Post a Comment