என் வீட்டு கொலு





  🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷  
🌱                                                                                                       🌱      
 🌷        ஒன்று இரண்டு மூன்று என ஒன்பது படிகள் அமைத்து        🌷
 🌱  ஒன்பதாம் படியில் தசாவதார பொம்மைகள் வரிசைபடுத்தி     🌱
 🌷       எட்டாம் படியில் வித விதமான கண்ணனை நிறைத்து         🌷
 🌱  ஏழாம் படியில் இராமனுஜரையும், ஆழ்வார்களையும் இருத்தி  🌱
 🌷       ஆறாம் படியில் பாரதியும், திருவள்ளுவரையும் வைத்து        🌷
 🌱   ஐந்தாம் படியில் சிங்கமும், புலியும், யானையும உலாவிட்டு     🌱
 🌷       நான்காம் படியில் பட்டாம் பூச்சிகளை பறக்கவிட்டு             🌷
 🌱   மூன்றாம் படியில் டைனோசர்களை  அதிர நடக்க விட்டு        🌱  
 🌷      இரண்டாம் படியில் சங்கு பொம்மைகளை சங்கமித்து         🌷
 🌱  ஒன்றாம் படியில் மரம், செடி கொடிகள்,கனிகள் அமைத்து     🌱
 🌷            அழகாய் கொலு வைத்திட ஆசை ஆசை                         🌷
 🌱  ஆசை தீரும் காலம் எப்பொழுது என தெரியாத நிலையில்      🌱
  🌷       பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல்                    🌷
  🌱  பொம்மைகள்  இடத்தில் என் எழுத்தை வைத்துள்ளேன்         🌱
  🌷     இதோ என்  மஞ்சள்,குங்குமம்வெற்றிலைபாக்கு          🌷
  🌱  ஒரு நாள்  பொம்மைகள் என்னை வந்து அடையும்  பொழுது   🌱
  🌷       ஒன்று இரண்டு மூன்று என ஒன்பது படிகள் அமைத்து....      🌷
   🌱                                                                                                       🌱
          🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷🌱🌷   
          

ரசம்....


(இது ஶ்ரீப்ரியா மையத்தில் சேருவதற்கு முன் நடந்தது)

இன்று காலை சுமார் ஏழு மணி அளவில்,  ஶ்ரீப்ரியாவினால்.....அதான் நம் நடிகை ஶ்ரீப்ரியா அவர்களினால் என் ரசம் குழம்பானது.

உங்களுக்கு ஶ்ரீப்ரியா அவர்களை  பிடிக்குமா என்று எனக்கு தெரியாது.  எனக்கு அவர் குரலும், அவரின் நகைச்சுவை உணர்வும் மிகவும் பிடிக்கும்.  ஶ்ரீப்ரியாவைப் ஏன் எனக்கு பிடிக்கும் என்ற  காரணத்தை பார்த்தாயிற்று.  இனி ரசம் குழம்பான கதையைப் பார்ப்போம்.  

ஶ்ரீப்ரியா அவரின் ட்விட்டர் பதிவுகள் எனக்கு பிடிக்கும். அவர் எப்பொழுதும் போல் பதிவு ஒன்றைப் போட......என் கையை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல், நான் அதற்கு ஒரு காமெண்டைப் போட.....இங்கே தான் ஆரம்பமாகிறது நம் கதை.  காமெண்டைப் போட்டு விட்டு காலை வேலைகளில் நான் மூழ்கி நீந்திக் கொண்டிருக்க....சரியாக ஏழு மணி....ரசம் நுரைத்து வரும் சமயம்.....ஶ்ரீப்ரியா அவர்களிடம் இருந்து என் காமெண்டுக்கு பதில் காமெண்ட்.....ஒரே ஒரு சொல் தான்...அந்த ஒரே ஒரு சொல்லால் என் மனதை கவர்ந்தார்.   அவரிடமிருந்து காமெண்ட் வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  ஒரே சிரிப்பு, மனதில் மத்தாப்பு, அவர் பால் மேலும் ஒரு ஈர்ப்பு.  எல்லா "பு"வும் சேர்ந்ததால் நுரைத்து வரும் ரசம் மறந்து போனது.  என் கணவரிடம் ஶ்ரீப்ரியா அவர்களின் காமெண்டை காமிக்கலாம் என்று நினைத்து போனால்...நிற்க.  என் கணவர் ஒரு on-call-gist..எப்பொழுது பார்த்தாலும் மீட்டிங், மீட்டிங் என்று ஃபோனிலேயே இருப்பார்.  நான் முக்கியமா, call முக்கியமா என்று பல முறை கேட்டிருக்கிறேன்.  இன்று வரை பதில் இல்லை. நம் கதைக்கு வருவோம்...காமெண்டை காண்பிக்க போனேனா...வழக்கம் போல் மீட்டிங்..மீட்டிங்....அவர் பக்கத்தில் போய் நின்றும் என்னை கண்டு கொள்ளவில்லை...உன்னை பிறகு கவனித்துக் கொள்கிறேன் கணவா என்று மனதில் முனகிவிட்டு சமையல் அறைக்கு வந்தால்....என் ரசம் கொதித்து, வற்றி, குழம்பாக மாறிவிட்டது...

அந்த குழம்பான ரசத்தை எடுத்துவிட்டு,  வெண்டைக்காயை அடுப்பில் போட்டுவிட்டு..."மேடம் உங்களால் என் ரசம் இன்று குழம்பானது" என்று எழுத நினைத்தேன்....என் வெண்டைக்காய் கறி கருகுவதை நான் விரும்பவில்லை.  

கண்ணா வருவாயா...

ஊரெல்லாம் கண்ணனின் பிறந்த நாளை போன மாதமே கொண்டாடி முடிக்க, எங்களுக்கான கண்ணனின் பிறந்த நாள் இன்னும் ஒரு வாரத்தில்.  தீபாவளியும், பொங்கலும், தமிழ் வருடப் பிறப்பும் ஒழங்காக கொண்டாடுகிறேனோ இல்லையோ, கண்ணனின் பிறந்த நாளை மட்டும் ஒரு குறைவும் இல்லாமல்.....அதாவது என் மனதிற்கு ஒரு குறைவும் இல்லாமல் கொண்டாடுவது பழகிவிட்டது.  என்ன தான் கண்ணன் தெய்வமாக இருந்தாலும், நம்மைப் போலவே பொய்,புனை, திருட்டு எல்லாம் நம்மைப் போலவே செய்வதால் அவர் மேல் தனி காதல்.

முறுக்கு, சீடை, வெல்ல சீடையுடன், கடந்த நான்கு வருடங்களாக கண்ணனின் பிறந்த நாளுக்கு ஏதோ ஒன்று எழுத கிடைத்தது.  மனதின் ஒரு பக்கம் முறுக்கும், சீடையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, இன்னொரு புறம் எழுத்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.  ஆனால் இந்த முறை இது வரை எழுதுவதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை.  மேல் மாடி வெறும் காலி.  பட்சணங்கள் செய்வதற்கு அரிசி மாவும், வெல்லமும், சர்க்கரையும் கடையில் சென்று வாங்கலாம்.  எழுதுவதற்கு எங்கே செல்வது?

இப்படி தான் இரண்டு வருடங்களுக்கு முன்  ஒரு தவிப்பு.  வரலஷ்மி விரதம் அன்று என் தோழியின் வீட்டிற்கு தாம்பூலம் வாங்கச் சென்ற பொழுது அவள் வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் நேர்த்தியாய் கட்டப் பட்டிருந்தது என் கண்ணில் பட்டு மனதை தொட்டது.  இந்த முறை கிருஷ்ண ஜயந்தி அன்று கட்டாயமாக நம் வீட்டு வாசலிலும் மாவிலை கட்டியே ஆகவேண்டும் என்ற பித்து பிடித்துக் கொண்டது.  இது போதாதென்று என் தோழி வாழை இலையில் வடை தட்டியதாக சொல்ல,  கிருஷ்ண ஜயந்திக்கு வாழை இலையில் தான் வடை என்று உறுதியாகிவிட்டது.  எல்லாவற்றிற்கும் மேலாக கிருஷ்ண ஜயந்தி அன்று வாட்ஸ் அப் மெசெஜ் ஒன்று கண்ணனுக்கு கட்டாயமாக அவல்நைவேத்யம் செய்ய வேண்டும் என்று சொல்லிற்று.  அவல் எல்லாம் வழக்கம் இல்லை என்றாலும் கண்ணனுக்காக வழக்கத்தை மாற்றலாம் என்று மாவிலையும், வாழை இலையும், அவலையும் வாங்குவதற்காக  சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றேன்.  சென்றால்.......மாவிலையும், வாழை இலையும் இருக்கும் இடம் காலியாக இருந்தது.  என்னடா இது நமக்கு வந்த சோதனை என்று என்னால் முடிந்த மட்டிலும்  தேடினேன். கிடைக்கவில்லை.  சரி "அவலை" வாங்குவோம் என்று போனால்...அவல் இருக்கும் aisleலில் ஏதோ கொட்டி ரணகளம் ஆகிவிட்டதால், அங்கு யாரையும் அனுமதிக்கவில்லை.  இந்த கண்ணன் என்பவர் பேசும் தெய்வம்...அதாவது நான் அடிக்கடி பேசும் தெய்வம்.  அன்றும் அப்படி தான் மைண்ட் வாய்ஸ்ஸ்ல் பேசினேன்..இல்லை,இல்லை திட்டினேன்.... "உனக்கு  வாங்கணும்னு   நான் ஆசைப்பட்டா போதாது...நீயும் எனக்கு தருவதற்கு ஆசைப்படணும்.." மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து கத்தி பேசிவிட்டேனோ என்னவோ.....கேட்க வேண்டியவருக்கு எட்டி விட்டது.  ஏனெனில் கடையை விட்டு வெளியே வர நினைக்கையில்.....ஒரு ஷாப்பிங் கார்ட்டில் ஒரு கட்டு மாவிலை, ஒரு கட்டு வாழை இலை, ஒரு பாக்கெட் அவல்......ஒரு நிமிடம் நவரசத்துக்குள்ளானேன். நவரசத்திலிருந்து விடுபட்டு....அவற்றை வாங்கி, வீடு வந்து சேர்ந்து.....கண்ணனின்பிறந்த நாள் மாவிலை தோரணத்துடன், வாழை இலையில் தட்டிய வடையுடனும், அவலுடனும் இனிதே முடிந்தது.

போன வருடம் வேறு ஒரு தவிப்பு.  கண்ணனின் பிறந்த நாளையொட்டி கதை ஒன்று எழுதியிருந்தேன்.  அதில் கண்ணன், யாரோ ஒருவரின் வீட்டிற்கு மனித உருவத்தில் வந்து ப்ரசாதம் உண்பதாக எழுதியிருந்தேன்.  எழுதியதோடு நிறுத்தியிருக்கலாம். மீண்டும் மைண்ட் வாய்ஸ்.."இவ்ளோ கஷ்ட்டப்பட்டு பண்றேனே ஒரு நாளைக்காவது எங்க வீட்டுக்கு வந்து ஏதாவது சாப்ட்டிருக்கயா.  கதைல மட்டும் தான் நீ வருவ..." என்று புலம்புவதை புலம்பிவிட்டு வேலைகளின் மூழ்கினேன்.  கிருஷ்ண ஜயந்தி அன்று சுமார் எட்டு மணி. கண்ணனுக்கு ஆசை தீர பிறந்த நாள் வாழ்த்துகள் பாடி, உணவளித்து விட்டு நாங்கள் சாப்பிடும் நேரம்...வாசல் கதவு தட்டும் ஒசை...திறந்தால்....கையில் ஒரு ப்ளாஸ்டிக் பையோடு சுமார் பத்து, பதினொரு வயது கொண்ட ஒரு குட்டி பையன்.  அந்த பையனின் பெயர் கண்ணன் என்றோ, கிருஷ்ணன் என்றோ, மாதவன் என்றோ, கோபாலன் என்றோ, மதுசூதனன என்றோ, கோவிந்தன் என்றோ நீங்கள் நினைக்க வேண்டாம்.  அந்த குட்டி பையன் என் தோழியின் மகன்.  அன்று காலை தான் அவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருந்தார்கள்.  இந்தியாவிலிருந்து கொண்டு வந்த இனிப்புகளும், காரங்களும் அவனிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறாள்.  அந்த பையை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் வரும்படி அழைத்தேன். அது வரவில்லை.  கிருஷ்ண ஜயந்தி பட்சணம் குடுக்கலாம் என்றால் ...அது தெலுங்கு பையன். நம் சீடையோ, வெல்ல சீடையோ, அப்பமோ எதையும் சாப்பிடாது.  முறுக்கு ஒன்று எடுத்து அது கையில் குடுக்கையில்...சிகப்பும், வெள்ளையுமாக அது அணிந்திருந்த சட்டையின் புது வாசனை என்னை கவர்ந்தது..  முறுக்கை அது கையில் குடுத்துவிட்டு.."நியூ ஷர்ட் ..." என்றேன்.  முறுக்கை ஒரு கடி கடித்துவிட்டு " யெஸ் ஆண்டி...டூடே இஸ் மை பர்த்டே..."  என்று சொல்லிக் கொண்டே ஓடி போய் விட்டது.

இந்த வருடம் எதுவும் எழுதுவதற்கில்லை என்ற தவிப்பு.  இது எழுதியிருப்பது மைண்ட வாய்ஸ் புலம்பல்.  நான் எழுத நினைப்பது வேறு  ஏதோ.  என்ன என்று சொல்லத் தெரியவில்லை.   விட்டு இங்கு புலம்பியிருக்கிறறேன்.   என் தவிப்பிற்கு விடை கிடைக்குமா?  கண்ணா வருவாயா....