மருமகள் VS மருமகன்

இன்று அதிகாலை சுமார் ஐந்து மணிக்கு....  வாட்ஸப்பில் வந்த செய்தி ஒன்று என் மூளைக்குள் புகுந்து மின்னலடித்தது.   என் மனதில் வெகு நாட்களாக கேள்விக்குறியாக இருக்கும் விஷயம் ஒன்று  வாட்ஸப்பில் வந்த போது மின்னல் மட்டும் அடிக்கவில்லை... இடி, முழக்கம் எல்லாம் அடித்து பட்டையைக் கிளப்பியது.  அந்த கேள்விக்குறி என்னவென்றால் ஒரு மருமகனுக்கு அவனது மாமியார்-மாமனார் வீட்டில் கிடைக்கும் மரியாதை, கவனிப்பு இத்யாதிகள், ஏன் மருமகளுக்கு அவளது மாமியார்-மாமனார் வீட்டில் கிடைப்பதில்லை?  இந்த கேள்விக்குறியுடன் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்த வேளையில் தான்....ஐந்து மணி, வாட்ஸ்ஸப் நிகழ்ந்தது.  அந்த  வாட்ஸப் செய்தி ஒரு பெண் அம்மா வீட்டில் எப்படி சந்தோஷமாய் சுதந்திரமாய் இருக்கிறாள் என்பதையும், மாமியார் வீட்டில்  எப்படி.........இருக்கிறாள் என்பதையும் சொல்லியது. அந்த செய்தியில் என் கைவண்ணத்தை புகுத்தி, ஒரு ஆண் எப்படி அம்மா வீட்டிலும் சரி, மாமியார் வீட்டிலும் சரி ராஜ மரியாதையோடு இருக்கிறான் என்று இந்த உலகத்திற்கு எடுத்துரைத்திருக்கிறேன்.  


மருமகள் VS மருமகன்

பெண்

கதறும் அலாரத்தை மண்டையில் தட்டி நிறுத்திவிட்டு, இழுத்து போர்த்திக் கொண்டு  தூங்குவது அம்மா வீட்டில்.   
அலாரம்  இல்லாமலேயே அடித்து பிடித்து எழுந்துவிடுவது மாமியார் வீட்டில்.

ஆண்: 

கதறும் அலாரத்தை மண்டையில் தட்டி நிறுத்திவிட்டு, இழுத்து போத்திக் கொண்டு தூங்குவது அம்மா வீட்டில்.          
அடித்து பிடித்து எழு வேண்டிய அவசியமில்லை. மேலும் எழுந்தவுடன் சூடான காஃபி,  செய்திதாள் எல்லாம் கிடைக்கும் மாமியார் வீட்டில். 

பெண் :  

சமைத்த  சாப்பாடு காத்திருக்கும் அம்மா வீட்டில்.
நேரத்திற்கு சமைத்து விட்டு மற்றவர்களுக்காக காத்திருப்பது மாமியார் வீட்டில்.

ஆண்:  

 சமைத்த  சாப்பாடு காத்திருக்கும் அம்மா வீட்டில்
 சமைத்த சாப்பாடு மட்டும் அல்லாமல் ஒரு குடும்பமே இவர் சாப்பிடுவதற்காக காத்திருக்கும் மாமியார் வீட்டில். 

பெண்:  

கையை விட்டு மொபைல் கீழே இறங்காது அம்மா வீட்டில்.
மொபைல் வைத்த இடமே மறந்து போகும் மாமியார் வீட்டில்.

ஆண்:  

கையை விட்டு மொபைல் கீழே இறங்காது அம்மா வீட்டில்.
மொபைல் பார்ப்பதற்கு வசதியாக மின் விசிறி, குளிர் சாதனம், பஜ்ஜி, பக்கோடா எல்லாம்  பார்த்து பார்த்து ஏற்பாடு செய்யப்படும் மாமியார் வீட்டில்.
             
பெண் : 

டி.வி ரிமோட்  கையில் மாட்டிக் கொண்டு படாத பாடு படும் அம்மா வீட்டில்.
டி.வி.யில் "வயலும் வாழ்வும்" ஓடிக்கொண்டிருந்தாலும் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பது மாமியார் வீட்டில்.    

ஆண்:  

 டி.வி ரிமோட் கையில் மாட்டிக் கொண்டு படாத பாடு படும் அம்மா வீட்டில்.
 காரே பூரே என்று புரியாத மொழியில் இவருக்காக டி.வி. ஒடிக்கொண்டிருக்க, வீடு  மொத்தமும் காரே பூரேவை பார்க்கும் மாமியார் வீட்டில்.

பெண் : 

துணி துவைக்க இயலாத நாட்களில், துணி துவைத்து காய வைக்கப் பட்டிருக்கும் அம்மா  வீட்டில் .  
துணி துவைக்க இயலாத நாட்களில், துணிகள் துவைக்கப்படாமல் அப்படியே இருக்கும் மாமியார் வீட்டில்.

ஆண்:  

துணி துவைக்க இயலாத நாட்களில், துணி துவைத்து காய வைக்கப் பட்டிருக்கும் அம்மா வீட்டில்.
துணி துவைக்க....மூச்...துணிகள் துவைத்து, இஸ்த்திரி செய்யப்பட்டு அழகாய் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் மாமியார் வீட்டில்.      

பெண் :  

நினைத்தபோது எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் அம்மா வீட்டில்.
அம்மா வீட்டிற்கு செல்வதற்கு கூட அனுமதி வாங்க வேண்டும் மாமியார் வீட்டில்.

ஆண்: 

 நினைத்தபோது எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் அம்மா வீட்டில்.
 நினைத்தபோது எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு வசதிகள் செய்து தரப்படும் மாமியார் வீட்டில்
           

ஆணும் பெண்ணும் சமமாய் இருக்கலாம். ஆனால் மருமகனும், மருமகளும் சமம் அல்ல.