Sunday, January 29, 2017

ராஜ்காட் (சிறுகதை)

மே மாத சென்னை வெய்யில் எவ்வளவோ மேல்.  மத்தியானப் பொழுதுகளில் சுட்டெறிக்கும்.  அந்தி சாய சாய வெய்யில் கடுமை குறைந்து, கடல் காற்று இதம் தரும்.  ஆனால் மே மாத புது தில்லி வெய்யில் அப்படி அல்ல. விடியற்காலையில் சுட்டெரிக்க ஆரம்பித்து இரவு வரை சுட்டுக் கொண்டே இருக்கும். காற்று என்பது பெயருக்குக் கூட இராது.    அந்த மே மாத மத்தியான வெய்யிலில் தீபிகாவும் அவள் கணவரும், இரண்டு குழந்தைகளும் புது தில்லியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

குதூப் மினாரை  திறந்த வாய்  மூடாமல் அண்ணாந்து பார்த்து, ஃபோனில் புகைப்படம் எடுத்துக்  கொண்டிருந்த போது,  தீபிகாவிற்கு தலை கிறு கிறு வென்று சுற்ற ஆரம்பித்தது.  அவள் கீழே விழ போக, நடிகர் ஜீவா ஜாடையில் இருந்த அவளின்  கணவர் அவளைத்  தாங்கிப் பிடித்து,  பக்கத்தில் இருந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார்.  அந்த கட்டிடத்தில் இருந்த திண்ணைப் போல் ஒன்றில் அவளை உட்கார வைத்து, தண்ணீர் பாட்டிலை நீட்டினார்.  பாட்டிலை வாங்கிய தீபிகா மடக், மடக் என்று தண்ணீர் குடித்தாள். இடக்கையில் படிந்திருந்த சுடிதாரின் துணியில், தண்ணீர் குடித்த வாயையும், வேர்வை வழியும் முகத்தையும் துடைத்துக் கொண்டாள்.  தலைச் சுற்றல் விடைப் பெற்று போயிருந்தது.   ஒரு பெரிய பெருமூச்சுடன் தீபிகா  பாட்டிலை முடுகையில் அவள் கணவர்,

"அப்பவே முரளி சொன்னான்...  மே மாசம் டில்லில வெய்யில் பிச்சு வாங்கும், ஃபிப்ரவரி, மார்ச்ல போங்கன்னான்.  நீ கேட்டயா? இந்த  மண்டைய பொளக்கற வெய்யில்ல , டில்லிய சுத்திப் பாக்க நம்மள தவிர யாரும் வரமாட்டா..."

ஃபிப்ரவரி, மார்ச்ல ஸ்கூல்ல லீவ் குடுப்பாங்களாமா...தீபிகா கேட்க நினைத்தாள்.  கேட்கவில்லை.   தொலைவில் மகனும், மகளும்  குதூப் மினாரை பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.  அன்று குதுப் மினாரில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் கூட்டம் இருந்தது. அந்த கூட்டத்தில் ஒரு தமிழ் கூட இல்லையே என்று நினைத்தபடி கையில் இருந்த ஃபோனில் மணி பார்த்தாள்.  மணி மூன்று முப்.....

"அம்மா....," கத்திக் கொண்டே  மகன் ஒடி வந்தான்.  அவனைத் துரத்தியபடியே மகளும் ஒடி வந்தது.   பதினொரு வயதான தீபிகாவின் சீமந்த  புத்திரன் அவள்  கையில் இருந்த ஃபோனை பிடுங்கிக் கொண்டு, "குதூப் மினாருக்கு முன்னாடி உன்னை ஒரு ஃபோட்டோ எடுக்கறேன் வா.  வாட்ஸ் அப் டி.பி.யா போட்டுக்கலாம், " என்றான்.

இப்படி தான் தாஜ் மஹாலில்  அவளைப்  படம் பிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவளுக்கு  பின்னால்  இருந்த  இரண்டு வட இந்திய பாட்டிகளை படம் பிடித்திருந்தான்.

"ஒண்ணும் வேண்டாம். குடு ஃபோனை," அவனிடமிருந்து ஃபோனை வாங்கினாள்.

"அம்மா...தண்ணீ..." மகள் கேட்டது. அவள் கையிலிருந்த பாட்டிலை வாங்கி தண்ணீர் குடித்துவிட்டு, பாட்டிலை பக்கத்தில் நின்று கொண்டிருந்த அப்பாவிடம் தந்தது. அதன் "பாப்" தலையில் அணிந்திருந்த ஹேர் பாண்டை இரண்டு கைகளாலும் சரி செய்து கொண்டது.  தீபிகாவின் பக்கத்தில் அமர்ந்து அவளின் துப்பட்டாவால் முகத்தை துடைத்துக் கொண்டது.

"அம்மா... அங்க தெரியறதே ஒரு கடை அதுக்கு போலாமா,"  தூரத்தில் தெரிந்த  கடையைச் சுட்டிக் காட்டி கேட்டது.

"டோரா, புஜ்ஜி பாக்கறவங்களை அந்த கடைல அலோ பண்ண மாட்டாங்களாம்.."  மகன் கேலி செய்தான்.

"வெவ்வேவே...." மகள் ஒழுங்கு காட்டியது.

தீபிகா  இரண்டு பேரையும் சமாதானம் செய்து, " இங்கேந்து எழுந்தா டேக்ஸி புடிச்சு நேரா ரூம் தான்.  இந்த வெய்யில்ல என்னால எங்கயும் அலைய முடியாது," என்றாள்.

கணவர் டென்ஷன் ஆனார்.  "என்ன விளையாடறியா நீ? ரூம்ல இருக்கறதுக்கா டில்லி வந்த?  இன்னும் நம்ம ராஜ் காட் பாக்கலை.  நாளைக்கு  ...."

"ராஜ் காட் அடுத்த தடவை போலாம். இப்ப ரூமுக்கு போலாம்."  ஹேண்ட் பாகைத் திறந்து கூலிங் கிளாஸை எடுத்து அணிந்து கொண்டாள். இந்த கூலிங் கிளாசை அப்பொழுதே போட்டுக் கொண்டிருந்தால் தலை சுற்றியிருக்காதோ....

 "அடுத்த தடவை எப்ப டில்லி வருவோமோ தெரியாது.  டில்லில எல்லாம் பாத்துட்டோம். ராஜ் காட் மட்டும் தான் பாக்கலை.  கிளம்பு. போய் பாத்துட்டு வருவோம்."   அவர் கை கொடுக்க, அந்த கையைப் பிடித்த படி தீபிகா எழுந்தாள்.

"காந்தி இருந்தாலாவது போய் பாக்கலாம்.  அவர் சமாதி எப்பவும் அங்கதான் இருக்க போறது.  நெக்ஸ்ட் டைம்...."

"சரி, நீ ரூமுக்கு போ.  நாங்க ராஜ் காட் போறோம்.   ராஜ் காட் போயிட்டு, பிர்லா மந்திர் போயிட்டு,  டின்னர் சாப்டுட்டு......" கணவர் அடுக்கிக் கொண்டே போக,  இப்பொழுது தீபிகா டென்ஷன் ஆனாள்.  இவர்கள் வரும் வரை ரூமில் என்ன பண்ணுவது, பாஷை தெரியாத ஊரில்  யாருடன் பேசிக் கொண்டிருப்பது.

"நான் இல்லாம பசங்கள தனியா நீங்க எப்படி மேனேஜ் பண்ணுவீங்க?"  கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.  "உபர் புக் பண்ணுங்க."

கணவர் உபர் புக் பண்ண, தீபிகா வெய்யிலுக்கு பயந்து துப்பட்டாவை தலையைச் சுற்றி போட்டுக் கொண்டே  " இந்த நார்த் இந்தியன் லேடீஸ் எல்லாம் வெய்யிலேந்து தப்பிக்க தான் தலைய கவர் பண்ணிக்கறாங்க, இப்ப தான் தெரியறது," என்றாள்.

அவர்கள் குதூப் மினாரை விட்டு வெளியே வரவும், அவர்களின் உபர் வரவும் சரியாக இருந்தது.  கார் கதவை திறந்து ஏறுவதற்கு முன், அந்த காரின் கண்ணாடி ஜன்னலின் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.   அந்த உபர் டில்லி ராஜபாட்டையில் வேகமாய் சென்று கொண்டிருக்கையில், திடீரென்று தெரிந்த இந்தியா கேட்டைப் பார்த்து பிள்ளைகள் கூச்சலிட்டார்கள்.  முழுசாய் ஐம்பது நிமிடங்களுக்கு பிறகு ராஜ் காட்டை அடைந்தது உபர்.

"இதுவா ராஜ் காட்?" கேட்டுக் கொண்டே இறங்கினான் மகன்.   வீட்டின் முகப்பு தோற்றம் போல் நடுவே பாதை விட்டு, இரண்டு பக்கமும் காம்பவுண்ட் சுவர் இருந்தது.  காம்பபவுண்டு சுவரின் இரு பக்கமும் பெரிய கதவுகள் இருந்தன. அவை உள் பக்கமாய் திறந்து இருந்தது.   காம்பவுண்ட் சுவர் தாண்டி உள்ளே காந்தி சமாதிக்கு போகும் சாலை இருந்தது. அந்த சாலையின் இரண்டு பக்கங்களிலும் அமைந்த மரங்களும், புல் தரையும் ரம்மியமாய் இருந்தது.

"நான் கூட வெறும் சமாதி இருக்கும் நினைச்சேன்.  இப்படி காம்ப்வுண்ட் வால், கேட் எல்லாம் இருக்கும்னு நினைக்கலை," என்றாள் தீபிகா.  காம்பவுண்ட் சுவரின் ஒரு பக்கத்தில் "ராஜ்காட்" என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது.    குழந்தைகளையும், கணவரையும் அதன் அருகே நிற்க வைத்து புகைப்படம் எடுத்தாள்.  பின் அவள் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டாள்.

"வரமாட்டேன், வரமாட்டேனுட்டு இப்ப செல்ஃபிலாம் எடுத்துண்டுருக்க?"  கதவை தாண்டி நடந்தபடியே கணவர் கேட்டார்.

"நீங்க யாரும் என்னை எடுக்கல. அதான் நானே எடுத்துண்டேன்."

கணவரும் குழுந்தைகளும் முன்னால் நடக்க, தீபிகா அக்கம் பக்கம் பார்த்தபடியே அவர்கள் பின்னால் நடந்தாள்.

 "அழகா ரோடு போட்டு, ரெண்டு சைடும் மரம் வைச்சு, நல்லா மெயிண்டைன் பண்ணிருக்காங்க.  ஆனா  காத்து  தான் வர மாட்டேங்கறது,"  என்றாள்.

"காந்தி சமாதி வந்திருக்கோம்.  காந்திய பத்தியும் கொஞ்சம் நினைச்சுண்டு வா..." என்றார் கணவர்.

அவருக்கு பதில் சொல்ல வாய் திறக்கையில் அவர்கள் எதிரே ஆண்களும் பெண்களுமாக பத்து பன்னிரெண்டு  வடக்கிந்தியர்கள் வந்து கொண்டிருந்தனர்.  பெண்கள் வலப்புறம் புடவை உடுத்தி,  இரண்டு கைகளிலும் நிறைய வளையல்கள் அணிந்து நெற்றியில் சிவப்பு நிற வட்ட வடிவ பொட்டிட்டு இருந்தனர்.  ஆண்கள் ஷர்ட்டும், ஜிப்பாவும் உடுத்தியிருந்தனர். ஹிந்தி அல்லாத வேறு ஒரு பாஷையில் உரையாடிக் கொண்டிருந்தனர்.  அவர்கள் பேச்சுக்கு பக்க வாத்தியம் போல் அந்த பெண்கள் அணிந்திருந்த வளையல்கள் சப்தம் எழுப்பின.  இவர்களை கட்ந்து  போகையில், "நானும் டில்லி வந்ததுலேந்து பாக்கறேன், ஒரு தமிழ் கூட காணும்," என்றாள் தீபிகா.

"இப்ப யாராவது தமிழ்காரங்கள பாத்தா, அவங்களோட போய் பேச போறயா?" என்றார் கணவர்.

"பேசறதுக்கு இல்ல, ஊரு விட்டு ஊரு வந்து நம்ம தமிழ கேட்டா நன்னா தானா இருக்கும்."

மீண்டும் அவர்கள் எதிரே சிலர் வந்து கொண்டிருக்க, தீபிகா பின்னால் திரும்பி பார்த்தாள்.  அவர்கள் பின்னால் யாரும் வரவில்லை.

"எல்லாரும் பாத்துட்டு திரும்பி வந்துண்டு இருக்கா.  நம்ம இப்ப தான் போறோம்," என்றாள் தீபிகா.

"குதூப் மினார்ல ஒரு மணி நேரம் உக்காந்திருந்தா, இப்படிதான் ...." என்ற கணவரை முறைத்தாள்.

"அப்பா, அப்பா, இந்த பக்கம் லெஃப்ட்ல போணம்," என்று இடது பக்கம் சுட்டிக் காட்டினான் மகன். இடது பக்கத்தில் சிறிது தூரத்தில் குகை போல் ஒரு வளைவு தெரிந்தது.  அந்த வளைவை அடைந்தார்கள். அந்த வளைவின் கீழே பாதணிகள் வைப்பதற்கு என்று  சின்ன சின்னதாய் பெட்டிகள் கொண்ட அலமாரி ஒன்று இருந்தது.  அந்த அலமாரியைப் பார்த்ததும், காலில் மாட்டியிருந்த செருப்பைக் கழற்றி வைக்கையில் "இந்த வெயில்ல செருப்பு இல்லாம எப்படி நடக்கறது?"  என்று கேட்டாள் தீபிகா.

"நாங்க எப்படி நடக்கறோமோ அப்படியே நடந்து வா," என்று சொல்லிவிட்டு முன்னே போனார்.  இடது பக்கம் திரும்பியதும் கீழே பச்சை நிறத்தில் கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது.

"தீபிகா உனக்காக கார்பெட் போட்டிருக்காங்க, பாரு," என்றார் கணவர். குழந்தைகள் அவரைத் தள்ளிக் கொண்டு முன்னே சென்றன.

குனிந்த படியே பச்சை நிற கம்பளத்தில் கால் வைத்தாள் தீபிகா. பின்னர்  நிமிர்ந்து பார்த்தாள்.   அவள் இருந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் சதுர வடிவில் கறுப்பு  வண்ண சலவைக் கல்லாலான காந்தி சமாதி தெரிந்தது.  ஒரு நிமிடம் அப்படியே நின்றாள்.  அங்கு அந்த சமயம் அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. அந்த சமாதியின் அழகும், அங்கு நிலவிய அமைதியும் அவளை என்னவோ செய்தது. சமாதியின் மேல் வைத்த கண்ணை எடுக்காமல் முன்னே நடந்தாள். சமாதியின் அருகே வந்தாள்.  கணவரும் குழந்தைகளும் சமாதியை மெதுவாக வலம் வந்து கொண்டிருந்தனர்.  சமாதியின் மேல் பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.  சமாதியின் ஒரு பக்கத்தில் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் தீபம் எறிந்து கொண்டிருந்தது.  சமாதியின் முன் பக்கத்தில் "ஹே ராம்" என்று ஹிந்தியில் எழுதியிருந்தது.  காந்தியின் கதை அவள் மனதில் ஓடியது. தலையைச் சுற்றி இருந்த துப்பட்டாவை அவிழ்த்தாள்.  கண்களில் அணிந்திருந்த கண்ணாடியைக் கழட்டினாள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, அவளும் அவள் தோழிகளும் சேர்ந்து  இந்திய சுதந்திர போராட்டம் பற்றி நடத்திய நாடகத்தின் இறுதியில் காந்தி சுட்டுக் கொல்லப்படும் காட்சி அவள் நினைவில் வந்தது.  அந்த நினைப்பில் இருக்கும் பொழுது தான் அது நடந்தது.

 எங்கிருந்தோ திடீரென்று இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் தீபிகாவின் பக்கதில் வந்து நின்றனர்.  அவர்களுக்கு ஐம்பதிலிருந்து அறுபது வயதிற்குள் இருக்கும்.  ஆண்கள் வேட்டி கட்டி இருந்தனர்.  அவர்கள் நெற்றியில் விபூதி.  பெண்கள் இடது பக்கம் புடவை உடுத்தி, பெரிய சிவப்பு பொட்டு வைத்திருந்தனர். சிவப்பு பொட்டின் மேல் விபூதி கீற்று சற்றே மங்கலாய் தெரிந்தது.    அவர்கள் ஐவரும் காந்தி சமாதியை கீழே விழுந்து வணங்கினர்.  எழுந்து தலை மேல் கை தூக்கி கும்பிட்டனர்.  பின் அதிலிருந்த ஒரு பெண்மணி பாட ஆரம்பித்தாள்.  "ரகுபதி ராகவ ராஜாராம்...." அவளுடன் கூட எல்லோரும் பாட தொடங்கினர். பாடிக் கொண்டே சமாதியை வலம் வந்தனர்.  கணவரும் குழந்தைகளும் அவர்களுடன் பாடிக் கொண்டே சமாதியை சுற்றி வந்தனர்.   "ராம ராம ஜெய ராஜா ராம்...." என்று அவர்கள் பாடிக் கொண்டிருக்கையில் தீபிகா காந்தி சமாதியை விழுந்து வணங்கினாள்.  வியர்வையில் அவள் உடம்புடன் அவள் உடை ஒட்டிக் கொண்டிருந்தது.No comments:

Post a Comment