சுகபிரசவம்

இன்று சுகபிரசவம் இனிதே நடந்தது.

கணவர் தட்டிக் கொடுக்க,  மகன் கை குலுக்க, மகள் கட்டிப் பிடித்துப் பாராட்டியது.

மொத்தத்தில் என் வீடு இன்று விழா கோலம் பூண்டது.

இன்று சுக பிரசவம் ஆனது என் சிறுகதை.

விகடனில் கதைகள் படித்து வளர்ந்த போது நினைத்து பார்க்கவில்லை

ஒரு நாள் என் கதையும் விகடன் பிரசுரங்களில் வரும் என்று.

அவள் விகடனில் இன்று கதையைக் கண்ட போது அன்று இன்ற தாயைப் போல் குழம்பி, கலங்கி, மகிழ்ந்தது உண்மை.

இந்த கரு என்னுள் சூல் கொண்ட போது நான் பட்ட பாடு அனேகம்.

இந்த கருவை நம்மால் தரிக்க முடியாது என்று அழிக்க நினைத்த நேரங்கள் ஆயிரம்.

வார்த்தைகள் வசப் படாமல் தலை சுற்றிய நேரங்கள் பல.

சொல்ல நினைத்ததை சொல்ல தெரியாமல் மயங்கிய நேரங்கள் சில.

தலை சுற்றலும், மயக்கமும் மெல்ல விலகிப் போக கருவை சுமந்த நேரங்கள் இனிமையாக போனது.

கரு மெல்ல வளர்ந்து கதையாய் மாற, மனம் ஆனந்ததம் கொண்டது.

நான் வளர்த்து கருவை வெளிக் கொணர அவள் விகடனின் துணை நாட, அவள் ஒப்புக் கொண்டாள்.

அவள் ஒப்புக் கொண்டதின் பேரில்  இன்று ப்ரசவித்தாள்.

செய்தி அறிந்து சுற்றமும், நட்பும் என்னைக்  கொண்டாடின.

நான் சுமந்தத கருவைப் படித்த சொந்தமும், பந்தமும், தோழமையும் என்னை உச்சாணிக் கொம்பில் ஏற்றி விட்டன.

ஏற்றி விட்ட நல் உள்ளங்களுக்கு நன்றி கடன் செய்வதறியாது விழித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்,

மற்றும் ஒரு முறை சூல் கொள்ள ஆசை படுகிறது மனது.

மயக்கமும், தலை சுற்றலும், அழித்து விடலாம் என்ற நினைப்பபும் மீண்டும் வரும்.

எல்லாவற்றையும் கடந்து கருவை உருவாக்கினாலும், உலகுக்கு அதை காண்பிக்க பத்திரிக்கைகள் சம்மதிக்காமல் போது நான் துவண்டு போகலாம்.

துவண்டால் தோள் கொடுக்க  கணவரும், குழந்தைகளும், சுற்றமும், நட்பும் இருக்க....

மீண்டும் கருத்தரிப்பேன்.