கர்ணனின் சாபம்

கர்ணன் பிறக்கும் போது கவசத்துடனும், குண்டலங்களுடனும் பிறந்தானாம்.  நானும் பிறக்கும் போது கோவத்துடனும், அழகையுடனும் பிறந்திருக்கிறேன்.  குழுந்தையாய் இருக்கும் போது  தொடங்கிய அந்த கோவமும், அழுகையும் இன்று வரை தொடர்கிறது.  இதில் அழுகை முதல் இடத்தைப் பிடிக்கிறது.  அதுவும் வெள்ளிகிழமை என்றால் கட்டாயமாக கண் கலங்குவது உண்டு.  இன்று வெள்ளிகிழமை.  கலங்கிக் கொண்டு தான் இருக்கிறேன்.  திங்கள் அன்று தொடங்கிய கலக்கம், வெள்ளி வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.  நான் அழுவதற்கு காரணம் என் அம்மா.

உங்கள் அம்மாவைப் போல் தான் என் அம்மாவும்.  எங்களுக்காகவே  உழைத்திருக்கிறாள்.  இன்றும் உழைத்துக் கொண்டு தான் இருக்கிறாள்.  என் அம்மா, என் அப்பாவைப் கவனித்துக் கொண்டது போல் நான் என் கணவரைக் கவனித்துக் கொள்கிறேனா, கட்டாயமாக இல்லை.  என் அம்மா எங்களைக் கவனித்தது போல் நான் என் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்கிறேனா, அதுவும் இல்லை.  என் அம்மாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் அனேகம் உண்டு.  அவற்றில் ஒன்று கூட நான் கற்றுக் கொள்ளவில்லை என்றாலும்,  கற்றுக் கொள்ளாமலேயே என் அம்மாவிடம் இருந்து எனக்கு வந்த செல்வங்கள் மூன்று.  ஒன்று - நகைச்சுவை உணர்வு.  இன்று என்னிடம் ஏதேனும் ஒரு துளியேனும் நகைச்சுவை உணர்வு இருந்தால் அதற்குக் காரணம் என் அம்மா.  என் அம்மாவிடமிருந்து தெரிக்கும் அந்த நகைச்சுவை உணர்வைக் கண்டு வியந்த நிமிடங்கள் பல உண்டு.  இரண்டு - புத்தகம் படிப்பது.  புத்தகம் படிக்கும் பழக்கம் மட்டும் இல்லாவிட்டால், என் வாழ்க்கையே இருண்டு விடும் என்று நான் பல முறை நினைத்தது உண்டு.  அந்த அருமையான பழக்கத்தைத் தந்தவர் என் அம்மா.  இன்றும் கூட ஒரு மெய்யெழுத்து, உயிரெழுத்து விடாமல் புத்தகங்களை வாசித்து கொண்டிருக்கிறாள்.  மூன்று- இசை.  புத்தகம் படிக்காமல் இருந்தால் வாழ்க்கை இருண்டு விடும், இசை கேட்கவில்லை என்றால் வாழ்க்கையே முடிந்து விடும்.  எனக்கு இசையில் இச்சையை வரவழைத்தவர் என் அம்மா.  என் அம்மா பெரிதாக கர்னாடக இசை எல்லாம் கற்றுக் கொண்டது கிடையாது.  ஆனால் ஒரு பாடல் ஆரம்பித்து ஐந்து நொடிகளுக்குள் என்ன ராகத்தில் அந்த பாடல் இருக்கிறது என்பதை மிகச் சரியாக சொல்வாள்.  இது எப்படி சாத்தியம் என்று வியந்து நானும் பாடல்கள் கேட்க தொடங்கியதின் விளைவு தான் இன்று எனக்கு இசை மேல் இருக்கும் ஆறா காதல்.  இப்படி அழியா செல்வங்களை அளித்த என் அம்மாவை,  என் வாயில் வந்த படி வைதுவிட்டேன்.

எனக்கு ஒரு ஆசை உண்டு.  என் பெற்றோர்கள் அமெரிக்கா வந்து எங்களுடன் இருக்க வேண்டும் என்பது தான் அந்த ஆசை.  என் அப்பா வர மறுத்து விட்டார்.  என் அம்மா என் குழந்தை பிறப்பிற்காக கடும் குளிர் காலத்தில் வந்து மாட்டிக் கொண்டாள்.  குளிர் காலம் அல்லாத நல்ல காலமும் உண்டு அமெரிக்காவில், என்று என் அம்மாவிற்கு காண்பிக்க ஆசை.  வசந்த  காலத்தில் பூத்துக் குலுங்கும் மலர்களையும்,  கோடைக் காலத்தில் இரவு  ஒன்பது மணி வரை இருக்கும் சூரியனையும், இலையுதிர் காலத்தில் நிறம் மாறும் மரங்களையும் என் அம்மாவிற்கு காமிக்க வேண்டும் என்று ஆசை.   என் அம்மாவிற்கு ஒரு நாளேனும் சமைத்து போட ஆசை.  நான் எப்படி சமைப்பேன் என்பது என் அம்மாவிற்கு தெரியாது.  அதையும் தவிர  என் பிள்ளைகள் பாட்டியுடன் சிரித்து பேசி மகிழ வேண்டும் என்றும் ஆசை.  என் அக்காக்களும், அவர்களின் கணவரும் பார்த்துக் கொள்வது போல் என் அம்மாவை எங்களால் பார்த்துக் கொள்ள இயலாது என்றாலும், எங்களால் முடிந்த வரை என் அம்மாவிற்கு பணிவிடை செய்ய ஆசை.  ஆனால் இது எதுவும் நடக்காது என்பது எனக்கு நன்றாக தெரியும்.  என் அம்மாவால் அமெரிக்கா வர இயலாது.  ஆகாய விமானத்தில் அதிக நேரம் உட்கார முடியாது.  இது தெரிந்தும் என் சுய நலத்திற்காக என் அம்மாவை  வற்புறுத்தினால் என்னைப் போல் கீழ் தரமானவள் வேறு யாருமே இருக்க முடியாது.  இது எல்லாம் அறிந்தும்  ஒரு நொடிப் பொழுதில் வார்த்தை தவறிவிட்டேன்.

என் அப்பாவின் மறைவிற்கு பிறகு என் அம்மா எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள்.  கடவுள் கொடுத்த வரமாய என் அக்கா என் அம்மாவை அழைத்துச் சென்றாள்.  வெளிநாடு தான்.  ஆனால் நான்கு மணி நேர பயணம் தான்.  என் அம்மாவை தங்க தாம்பாளத்தில் வைத்து பார்த்துக் கொண்டாள்.  என் அக்காவின் கணவரோ அதற்கு மேல்.  என் அம்மாவை தன் அம்மா போல் பார்த்துக் கொண்டார்.  அங்கு சந்தோஷமாய்  இருந்து விட்டு சென்னை திரும்பிய என் அம்மாவை நான்  தொலைபேசியில் அழைத்தேன்.  என் அக்கா வீட்டு அனுபவங்களை என் அம்மா நகைச்சுவை உணர்வுடன் சொல்வதைக் கேட்க காத்திருந்தேன்.  அப்பொழுது தான் அந்த பொல்லாத நிகழ்வு நடந்தேறியது.

அன்றொரு நாள் கர்ணன் பரசுராமரிடம் சாபம் பெற்றான்.  சரியான சந்தர்பத்தில் கற்ற மந்திரங்கள் எல்லாம் மறந்து போகும் என்ற  பொல்லா சாபம் அது .  அதே போல் நானும் யாரிடமோ தவறாக நடந்து சாபம் பெற்றிருக்கிறேன்.  அதனால் தான் என் அம்மா சந்தோஷமாய் தன் அனுபவங்களை சொல்லிக் கொண்டிருக்கும் போது எல்லாம் எனக்கு மறந்து போனது.  என் அம்மாவின் மேல் எனக்கு இருக்கும் அன்பு, அக்கறை, கவலை எல்லாம் ஒடி ஒளிந்து கொண்டது.  உள்ளே உறங்கிக் கொண்டிருந்த மிருகம் விழித்துக் கொண்டது.  என் அம்மா தன் அனுபவங்களைச் சொல்ல சொல்ல "என் இடத்திற்கு வராமல் போய் விட்டாளே" என்ற ஆதங்கம் வெறியாய் மாறியது.  என் எழுத்தில் சிறந்து விளங்க என் அம்மா கூறிய பொன்னான  அறிவுரை என் காதில் நாரசமாய் விழுந்தது.  என் அக்காவை புகழும் வாயால் என்னைப் பற்றியும் ரெண்டொரு வார்த்தை பாராட்டலாமே என்று கோவம் கொப்பளித்தது.  அடுத்தது என்ன பேசுவது என்று யோசிக்காமல் பொங்கிய அழுகையுடன்,  கொப்பளிக்கும் கோவத்துடன் என் அம்மாவை ஏதேதோ வைது விட்டேன். என் அம்மாவிற்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் அளிக்காமல் தொலைபேசியை துண்டித்தேன்.  இனி பேசவே கூடாது என்றும் தீர்மானித்தேன்.

பாவம் என் அம்மா.  தன் சந்தோஷத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டாள்.  அதற்கு இடம் கொடுக்காமல் என் அம்மாவின் மனதை காயப் படுத்திவிட்டேன்.  என் அம்மாவின் சந்தோஷத்தை குழி தோண்டி புதைத்து விட்டேன்.  என் அம்மாவும் பதறியிருப்பாள்.  செய்வதறியாது திகைத்திருப்பாள்.  எனக்கு தெரியாது.  என் துக்கம் தான் எனக்கு பெரியதாக தோன்றியது.

பேசப் போவதில்லை என்று பெரிதாக தீர்மானித்தேனே தவிர, பேசாமல் இருக்க முடியவில்லை.  அப்பாவும் இல்லை.  அம்மா மட்டும் தான்.  அம்மாவிடம் பேசாமல் யாரிடம் பேசுவது? ஒரு முறை, பள்ளி செல்லும் நேரத்தில் என் பெண்ணைக் கடிந்து கொண்டேன்.  அவள் கண்களில் கண்ணீர் குளமாய் தேங்க பள்ளி சென்றாள். அவள் சென்ற சிறிது நேரத்தில் மனது அடித்துக் கொண்டது. அவள் பள்ளிக்கு ஒடிச் சென்று, அவளிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்தேன்.  அதே போல் என் அம்மாவிடம் ஓடிச் சென்று  மன்னிப்பு கேட்க ஆசை.  ஒடிச் செல்லும் தூரத்தில் நான் இல்லை.  என் அம்மாவோ, உங்கள் அம்மாவோ, உலகில் உள்ள எந்த அம்மாவும் மன்ன்னிப்பை எதிர்பார்ப்பதில்லை.  ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க போவதும் இல்லை. ஆனாலும் மனம் அடிக்க தானே செய்கிறது.  என் அம்மாவை அழைத்தேன் மன்னிப்பு கேட்பதற்காக.

தொலைபேசியில் என் குரலைக் கேட்டவுடன் என் அம்மா என்னிடம் மன்னிப்பு கேட்டாள்.  நிலை குலைந்து போனேன்.  இதுவா ஒரு மகளின் லட்சணம்?  இருக்கும் போது ஒழுங்காக பேசாமல், பார்த்துக் கொள்ளாமல் போன பிறகு மாய்ந்து மாய்ந்து பேசி என்ன லாபம்?  இனி ஒரு முறை என்னைப் இது போல் பேச செய்யாதே, கண்ணா.  கர்ணனின் கவசத்தையும், குண்டலங்களையும் இந்திரன் வாங்கிச் சென்றது போல் என் கோவத்தையும் அழுகையும் வாங்கிச் செல்ல யாரேனும் ஒருவரை அனுப்பு. கடவுளிடம் முறையிடுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.

இங்கு இதை நான் எழுதுவது என் மேல் பச்சாதபம் வரவேண்டும் என்பதற்காக அல்ல.  செய்த தப்பை உணர்ந்த பிறகு பச்சாதாபத்தால் என்ன பயன்?  பின் எதற்கு இந்த பதிவு?  மனதின் ஓட்டங்களை சொல்வதற்கு  சிலருக்கு உறவு, சிலருக்கு நட்பு.  எனக்கு என் எழுத்து.  அதையும் தவிர மீண்டும் வழி மாறும் பொழுது நான் எழுதியது நினைவில் இருக்கும் என்ற நம்பிக்கை.

மீண்டும் வழி மாறாமல் இருக்க வேண்டும்.  கர்ணனின் சாபம் மீண்டும் அரங்கேறாமல் இருக்க வேண்டும்.
No comments:

Post a Comment