ஜீவா டைரக்டர் திரு.சுசீந்தரனுக்கு ஒரு கடிதம்

திரு சுசீந்தரன் அவர்களுக்கு,

வணக்கம்.  தங்களின் படமான  "ஜீவா"  பார்க்கும் மிகப் பெரிய பேறு கிடைத்தது.  படத்தைப் பார்த்த பின் நான் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.  மேலும் இருள் படர்ந்து இருக்கும் எங்கள் "கம்யூனிட்டி"க்கு ஓளி கொடுத்துள்ளீர்கள்.  அன்னிய தேசத்தில் வசிக்கும் நாங்கள்,  இந்தியாவிற்கே திரும்பி விடலாம் என்று பல முறை பெட்டி படுக்கைகளை தயார் செய்தது உண்டு.  அந்த சமயங்களில் எல்லாம் எங்களை இந்தியாவிற்கு குடிபெயர செய்யாமல் தடுப்பது, அங்கு இருக்கும் "ரிசர்வேஷன் சிஸ்டம்".   "Forward Caste" இல் பிறந்ததனால் எங்கு சென்றா
லும் எங்களுக்கு தடா தான்.  பள்ளி, கல்லூரி, வேலை எல்லாவற்றிலும் எங்களுக்கு இடம் இல்லை.  இப்படி இருக்கும் போது இந்தியா சென்று நாம் என்ன செய்வது, நம் பிள்ளைகள் என்ன செய்வது என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் வேளையில் உங்கள் படம் எங்களுக்கு வழிகாட்டியுள்ளது.  "கிரிக்கெட்" என்று ஒரு விளையாட்டு இருக்கிறது என்றும், அந்த துறையில் "Reservation System" இன்னும் வரவில்லை என்றும், அங்கு எங்களைப் போன்றவர்களுக்கு இடம் இன்னும் இருக்கிறது என்றும் தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.  இனி நாங்கள் இந்தியா வந்தால் எங்களுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்று ஆணித்தரமாக சொல்லியுள்ளீர்கள்.  இதை தவிர வேறு என்ன எங்களுக்கு வேண்டும்?

 மிக முக்கியமான விஷயத்தை மறந்து விட்டேனே.  பல லட்சங்கள் செலவழித்து உபனயனம் செய்து,  காயத்ரி மந்திரம் சொல்வதால் வரும் நன்மையும், சந்தியாவந்தனம் செய்வதால் வரும் நன்மைகளையும் பற்றி தான் பிள்ளைகளுக்குக் கூறிக் கொண்டிருந்தோம் இது நாள் வரை.  ஆனால் உங்கள் படத்தைப் பார்த்த பிறகு தான் பூணூலின் மகத்துவம் தெரிகிறது.  முதுகைத் தடவிப் பார்த்து வாய்ப்பு கொடுக்கும் இடங்களில் பூணூல் அணிவதினால் வரும் நன்மை புரிகிறது..  இனி யாரேனும் "பூணூல் அணிவதினால் என்ன நன்மை" என்று எங்களைக் கேட்டால், திரு. சுசீந்திரன் இயக்கிய "ஜீவா" படம் பாருங்கள் என்று  உங்கள் படத்தை பரிந்துரை செய்வேன்.

ஒன்று சொல்ல ஆசைபடுகிறேன்.  எங்களை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடினாலும் எதுவும் செய்ய மாட்டோம், காலில் போட்டு மிதித்தாலும் எதுவும் செய்ய மாட்டோம்.  ஏனென்றால் வம்பு சண்டைக்கும் போக மாட்டோம், வரும் சண்டையையும் தவிர்த்து விடுவோம்.  இதோ இங்கு நான் பதித்திருக்கும் கருத்துக்களுக்குக் கூட எனக்கு தான் கண்டனம் வருமே ஒழிய தங்களுக்கு ஏதுவும் ஆகாது.  அட, நான் என்ன பைத்தியம் போல் உளறிக் கொண்டிருக்கிறேன்.  கைப்புண்ணிற்கு கண்ணாடி தேவையா? சமீப காலமாக,  திரைப்படங்களை திரை இடுவதற்கு  எவ்வளவு பிரச்சனைகள்.  ஆனால் ஒரு "கம்யூனிட்டியை"ப் பற்றி குறை கூறியிருந்தாலும், உங்கள் படம் எந்த பிரச்சனையுமின்றி திரையிடப்பட்டதிலிருந்து தெரியவில்லையா, நாங்கள் யார் என்று?

கடைசியாக, உங்களுக்கு நாங்கள் மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.  தகுதி இருந்தும், திறமை இருந்தும் எண்ணற்ற இடங்களில் "forward caste" என்ற ஓரே காரணத்தினால் எங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.  அவற்றை எல்லாம் படம் பிடித்துக் காட்டி எதிர்மறை எண்ணங்களை உருவாக்காமல், மிக அழகாக எங்களுக்கு என்று ஒரு இடம் இருக்கிறது என்று காட்டியுள்ளீர்கள்.  எங்களுக்கு தன்னம்பிக்கை ஒளி காட்டிய உங்களுக்கு நன்றிகள் பல கோடி.


லிங்கா (No spoilers)

"லிங்கா"வை பற்றி எழுதுவதற்கு முன்னால்,  சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

எனக்குக் கத்திரிக்காய் பிடிப்பதில்லை.  அதனால் நான் அதை சாப்பிடுவதில்லை.  ஆனால் கத்திரிக்காயைப் பற்றி மட்டமாகவோ, கத்திரிக்காயை விரும்பி சாப்பிடுபவர்களைப் பற்றி தரக் குறைவாகவோ கட்டாயமாக நான் பேசியதில்லை, பேசவும் மாட்டேன்.  மேலும் எங்கேல்லாம் கத்திரிகாயைப் பற்றி எழுதி இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று "கத்திரிக்காயைப் போல மட்டமான காயை நான் பார்த்ததில்லை.  இந்த மட்டமான கறிகாயை உண்பதற்கு பதில் பட்டினியாய் இருக்கலாம்," என்று சாப்பிடுபவர்களின் மனம் புண்படும் படி என் கருத்தைச் சொல்ல மாட்டேன்.  முதலில் அதற்கு எனக்கு  நேரமும் இல்லை,  இரண்டாவது அவசியமும் இல்லை.  படிப்பறிவில்லாத நான் எனக்கு பிடிக்காத கத்திரிக்கயை விட்டு விலகி இருக்கும் போது, இந்த ஊடகம் முழுவதும் உள்ள மெத்த படித்த மக்கள் தங்களுக்கு பிடிக்காத ரஜினியை விட்டு ஏன் விலகி நிற்க மறுக்கிறார்கள்?  எங்கெல்லாம் மக்கள் "லிங்கா" வைப் பற்றி தங்கள் சந்தோஷத்தை தெரிவிக்கிறார்க்ளோ, அங்கெல்லாம் சென்று தங்கள் அவதூறான கருத்துக்களை ஏன் பதிக்கிறார்கள்?   "நல்ல கதையா இருக்கே,  எங்களுக்கு அந்த சினிமா பிடிக்கல, அத பத்தி நாங்க சொல்ல கூடாதா?" என்று கேட்டால், கட்டாயமாக, சொல்லாம்.  எங்கே? உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இடம் இருக்கிறது, அங்கே உங்கள் கருத்துக்களை, பொறுமல்களை, கோவங்களை  தாராளமாக பதிவு செய்து கொள்ளுங்கள். அதை விடுத்து  மற்றவர்கள் தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் போது, விலகி செல்லாமல், ஏன் கண், காது, தலை, மூக்கு என்று எல்லாவற்றையும் நுழைத்து மனதை வலிக்க செய்கிறார்கள்?  இது  ஏதோ ஒன்று இரண்டு சம்பவம் அல்ல.  ஊடகம் முழுவதும் நேற்று நடைபெற்ற சம்பவம் இது.

"நீ ரொம்ப ஒழுங்கா, கமல் என்பவரைப் பற்றி நீ உன் வாய்க்கு வந்த படி பேசவில்லையா?" என்று நீங்கள் கேட்கலாம்.  ஆம் பேசினேன்.  எங்கே? என் இடத்தில். மற்றவர்கள் இடத்தில் அல்ல. ஒன்று சொல்ல ஆசை படுகிறேன்.  கமல் என்பவர் எனக்கு எதிரி அல்ல.  அவரின் படங்களான பஞ்சதந்திரமும், வசூல் ராஜாவும் எவ்வளவு முறை பார்த்தேன் என்பதை என்னால் கணக்கிட முடியாது.   நான் பேசியது கமல் அவர்களின் கொள்கைக்கு மாறான செயலைப் பற்றியது. கடவுள் இல்லை என்பது அவர் கொள்கை.  அவரின் கொள்கையில் தலையிட எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் கடவுள்  இல்லை என்று சொல்லிவிட்டு, பின்  தன் படத்திற்கு எல்லாம் கடவுள் சார்ந்த பேரை வைப்பது,  கடவுளைக் கண்டபடி கையாள்வது போன்ற அவரின் முறணான செய்கையைத் பற்றிய  காழ்ப்புணர்ச்சியை தான், என் இடத்தில் கொட்டித் தீர்த்தேனே தவிர, வேறு எங்கும் சென்று என் கருத்தை சொல்வில்லை.

"லிங்கா" படமே ஓட்டை,  படத்தில் லாஜிக்கே இல்லை என்று, தமிழ் படங்கள் எல்லாவற்றிலும் "ஓட்டையே" இல்லாதது போலவும், "லாஜிக்"எல்லா தமிழ் படங்களிலும் நிரம்பி வழிவது போலவும் பேச்சு.  மரத்தை சுத்தி பாடும் போதே "லாஜிக்" போய்விட்டது.   இதில் "லிங்கா"வில் மட்டுமே "லாஜிக்" இல்லை என்பது என்ன வாதம்?  மேலும் எந்த படத்தில் ஓட்டை இல்லை.  தசாவதாரத்தில் இல்லையா, வீரத்தில் இல்லையா, கத்தியில் இல்லையா,  பயணத்தில் இல்லையா?  ஓட்டை இல்லாத படங்கள் "ஆஸ்கார்"க்கு மட்டுமே தேர்ந்தேடுக்கப்படும்.  எங்களுக்கு "ஆஸ்கார்" படங்கள் தேவையில்லை.

தன் குழுந்தைக்கு என்ன வேண்டும் என்று ஒரு தாய்க்கு தெரியும்.  அதே போல் ரஜினி என்பவர் தன் ரசிகர்களுக்கு என்ன  வேண்டும் என்று தெரிந்து அதை "லிங்கா"வில் கொடுத்திருக்கிறார்.  பிரிட்டிஷ் காலத்து "ரஜினி" அம்சமாய், ஹேண்ட்சம்மாய் இருக்கிறார்.  வயசானாலும் "ரஜினி" ஸ்டைல் அப்படியே இருக்கிறது.  அவருக்கே உரித்தான நகைச்சுவை படம் முழுவதும் தூவப்பட்டிருக்கிறது.  கடைசிக் காட்சியில் வெடிகுண்டை காலால் ஸ்டைலாக உதைக்கும் போது இது ரஜினியால் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது.  சந்தானம், அனுஷ்கா இருவரும் தங்களுக்கு கொடுத்த பாத்திரத்தில் மிளிர்கிறார்கள்.  ரஜினி தவிர இந்த படத்தில் பிடித்த அம்சம் "தண்ணி" காட்சிகளும், முகத்தை சுளிக்க வைக்கும் "கவர்ச்சி" காட்சிகளும் இல்லாதது.   குழந்தைகளோடு  நிம்மதியாய், பயமின்றி பார்க்க முடிந்தது.   பிடிக்காத விஷயம்  இந்த காலத்து ரஜினி மேக்கப், சோனாஷி சின்ஹா, பாடல்கள்.  எங்கோ சோலையூர் என்ற சிறிய தமிழ் கிராமத்தில் நடக்கும் கதைக்கு சோனாஷி சின்ஹா பொருந்தவே இல்லை.  தமிழ் முகமும் அவருக்கு இல்லை, கிராமத்து முகமும் இல்லை.  ஒட்ட வைத்தது போல் தனியாய் தெரிகிறார்.  "ஓ நண்பா" பாடலைத் தவிர வேறு எதுவும் மனதில் ஒட்டவில்லை.  ஏ.ஆர். ரஹ்மானிடம் பிடிக்காத விஷயம் தமிழ் நன்றாய் பாடத் தெரிந்த எத்தனையோ கலைஞர்கள் இங்கு இருக்கும் போது, வட நாட்டு பாடகர்களை தமிழில் பாட வைத்து, பாடலையும், பாடல் வரிகளையும் புரியாமல் இருக்கும் படி செய்து விடுகிறார்.

ரஜினி அருள் இருப்ப்வர்களுக்கு "லிங்கா" தெரியும்.  அருள் இல்லாதவர்களுக்கு…..!!!!!


கண்ணே, கனியே…….(கணவனின் சத்தியம்)

அஹம், அஹம்…..தலைவர் பிறந்த நாள் வருது.  கையும் ஓடல, காலும் ஒடல.  சரி, சரி,  பிறந்த நாளப் பத்தி அப்புறம் பேசுவோம்.  வந்த வேலைய பாப்போம்.

கோச்சடையான் படத்துல "மணமகனின் சத்தியம்", "மணப்பெண்ணின் சத்தியம்" பாட்டு கேட்டிருக்கீங்களா?  ரொம்ப சூப்பரா இருக்கும்.   நான் நிறைய தடவை கேட்டிருந்தாலும், நேத்து கேக்கும் போது தான் "பல்பு" அடிச்சுது.  அது என்னனா,  "மணமகனின் சத்தியம்" பாட்டுல ஒரு வரி வரும்.

      "மாத மலர்ச்சி மறையும் வயதில் மார்பு கொடுப்பேன்."

அட..அட..அடா.   தீர்க்க தரிசியாய்,  எப்பவோ வரப் போற "மறையும் வயது"  பற்றி பாடியதற்கு ஒரு "ஓ" போட்டாலும், மாதம், மாதம் வரும் "மாத சுழற்சி" க்கு யார் பாட்டு பாடறது?  சரி, அதுக்குக் கூட வேண்டாம்.  "மாத சூழற்சி"க்கு முன்னால ஐந்து நாளோ, பத்து நாளோ "P.M.S" என்ற emotional roller-coasterஆல, "அந்நியன்" விக்ரம் மாதிரி ஒரு நிமிஷம்  சிரிப்பு, அடுத்த நிமிஷம் கோவம், அதுக்கு அடுத்த நிமிஷம் அழுகைனு கஷ்டபடறோமே அதுக்கு யாரு பாட்டு பாடறது?  நான் தேன்…..

(வைரமுத்து சார், உங்க பாட்ட கையாண்டதுக்கு, மன்னிச்சுருங்க)



கண்ணே, கனியே…….(கணவனின் சத்தியம்)
(அந்த ஐந்து/பத்து நாட்களுக்காக கணவன் செய்யும் சத்தியம்)

கண்ணே கனியே உன்னை நெருங்கவும் மாட்டேன்
சத்தியம் சத்தியம், இது சத்தியமே.

மாலை சூட்டிய காதல் கண்மணி கேளேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே.

உன் அன்னை போலே, அன்பு தந்தை போலே தூய்மையான
என் சத்தியம் புனிதமானது.


மாதம் வரும் நாட்களில் நான் கவனம் கொள்வேன்.
நிமிடம் தோறும் மாறும் உன் மேல் பிரியம் கொள்வேன்.

கோபம் கொண்டு சீறும்போது மொளனம் காப்பேன்.
சோகம் கொண்டு துவளும் போது துணையாய் நிற்பேன்.

அந்நாளில் உனை நானும் புரிந்து கொள்வேன்.
உன் மனது இதமாக வழிகள் பார்பேன்.

(கண்ணே கனியே உன்னை நெருங்கவும் மாட்டேன்
சத்தியம் சத்தியம், இது சத்தியமே.)



சோர்ந்து போகும் நேரம் உந்தன் தாய் போல் இருப்பேன்.
பிள்ளை, பாடம், சமையல், வேலை கையில் கொள்வேன்.

மாத சூழற்சி மறையும் வரை பொறுமை காப்பேன்.
மறைந்து மீண்டும் பூக்கும் உன் மேல் கர்வம் கொள்வேன்.

உன் வலிகள் நலமாக இவையும் செய்வேன்.
நம் வாழ்வு மண்ணில் மலர எவையும் செய்வேன்.

(கண்ணே கனியே உன்னை நெருங்கவும் மாட்டேன்
சத்தியம் சத்தியம், இது சத்தியமே.)