ரெக்கை கட்டி பறக்குது

ஒண்ணு பத்து வயசுல கத்துண்டுருக்கணும், கத்துக்கலை.  இருவது வயசுல, மிக மிக முக்கியமான பொ றுப்புகள்: ஊர சுத்தணும், அரட்டை அடிக்கணும், (ரங்கனாதன்)தெரு பொறுக்கணும்..எக்சட்ரா, எக்சட்ரா, அதனால அப்பவும் கத்துக்கலை.  முப்பது வயசுல, வீடு என்றும், கணவண்/குழந்தைகள் என்றும், பாசம் என்றும், பந்தம்  என்றும்,  நூறு சொந்தம் வந்து பின்னே கத்துக்க நேரம் எங்கே?கடைசில, இந்த அறுவது வயசுல தான்...சரி வேணாம் . அம்பது வயசுல ....அதுவும் வேணாவா...சரி விடுங்க.  இப்ப வயசா முக்கியம்.  வந்த வேலைய பாப்போம்.

என் பையன தாஜா பண்ணி அவன் சைக்கிள கடன் வாங்கி,  என்னவர ஐஸ் வைச்சு "சைக்கிள் வாத்தியாரா" தயார் பண்ணி, ஒரு மாலை வேளைல எங்க வீட்டுக்குப் பின்னாடி காலியான பார்க்கிங் லாட்ல  சைக்கிள் ஒட்ட போனா, நல்லா நேரா இருந்த ரோடு நான் சைக்கிள்ல ஏறி உக்காந்ததும் ஒரே கோணலா மாறிப் போச்சு. இந்த சைக்கிளா, நேரா நிக்க மாட்டேங்குது.  இந்த பக்கம் சாயுது, அந்த பக்கம் சாயுது, ஒரே பேஜாரா போச்சு.  சரி, அவர் தான் சைக்கிள புடிச்சுண்டு இருக்காரே, நம்ம பெடல் பண்ணுவோம்னு பண்ணாக்க, கூட்டமான பல்லவன் பஸ் மாதிரி  ஒரு பக்கம் சாய்வாவே போகுது வண்டி.  சாயற வண்டிய நேர நிமித்தினா எங்கயாவது கீழ விழுந்துடுவோமோனு பயம் வேற.  இது போறாதுனு,  வாக்கிங் போற பெரியவர்களும், பார்க்குக் போற தாய்மார்களும்(எல்லாம் நம்ம தேசத்து மக்கள் தான்) டி.வி. சீரியல வைச்ச கண் வாங்காம பாக்கற மாதிரி, என்னையே பாத்துட்டுப் போறாங்க.  வான் இருக்கு, மண் இருக்கு, மரம் இருக்கு, செடி இருக்கு, கொடி இருக்கு, அதெல்லாம் கம்முனு பாத்துண்டு போக வேண்டியது தானே, என்னை என்ன பார்வைனு தெரியலை.  சேச்சே. சேச்சே. ஒரு பொண்ணு சைக்கிள் கத்துக்கப் போனா, எவ்வளவு இடர்பாடுகள்.  இவ்வளவு கஷ்டங்களுக்கு  நடுவுல நமக்கு இந்த சைக்கிள் தேவையா? முதல் கோணல் முற்றும் கோணல். முடிவு பண்ணிட்டேன், வேண்டவே வேண்டாம்.   "சைக்கிளாரே, உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி," என்று சைக்கிளிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டேன்.

ஆனா அடுத்த நாள் கார்த்தால coffeeயோட பேசிண்டு இருக்கும் போது மனசு மாறிடுத்து.  இன்னும் ஒரே ஒரு தடவை ஓட்டிப்  பாக்கணும் போல தோணித்து.  நம்மால வர தொந்தரவுகள பிறகு பாத்துப்போம், நம்மளை சுத்தி வர தொந்தரவுகளை முதல்ல கவனிப்போம்னு நினைச்சு, சாயங்கால நேரத்துல தான் கசமுச கசமுசனு ஒரே கூட்டம், அதனால  காலை வேளைக்கு மாத்தினேன்.  அடுத்த கட்டமா ஒண்ணு பண்ணேன். அதை மட்டும் பண்ணல, நான் சைக்கிள் கத்துண்டே இருக்க முடியாது.  அது என்னனா, என் கண்ணாடிய கழட்டிட்டேன்.  கண்ணாடிய கழட்டினப்புறம் தான் ஒரு தெளிவு வந்தது.  யார் என்ன பாக்கறாங்கனே தெரியலை.  நானு, சைக்கிள், அப்புறம் நம்ம சைக்கிள் வாத்தியார் அது மட்டும் தான் கண்ணுக்குத் தெரிஞ்சுது.  ரொம்ப நிம்மதியா போச்சு.  கண்ணாடிய கழட்டினாதா,  காலைத் தென்றலா, உதய சூரியனா, பறவைகளோட கீச்சு மூச்சா எதனாலனு தெரியலை, அன்னிக்கு ரொம்ப ஆடாம் கொஞ்சம் steadyயாவே ஓட்டினேன்.  ஒரு ரெண்டு நிமிஷம் ஒழுங்கா வண்டி ஒட்டறதுக்குள்ள  இந்த மனசு எங்கயோ போயிடுது.  எங்க போச்சு தெரியுமா?எல்லாம் எழுதறதுக்குத் தான்.  நம்ம சைக்கிள் கத்துக்கறதப் பத்தி ஒரு வேளை எழுதினா(இதெல்லாமா எழுதுவாங்க), என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுடுத்து.  இந்த சிவாஜி சார் சைக்கிள ஓட்டிண்டு ஒரு பாட்டு பாடுவாரே, "வந்து நாள் முதல் இந்த நாள் வரை" இத தலைப்பா வைக்கலாமா. வேண்டாம் ரொம்ப பழசா இருக்கேனு மனம் நிராகரித்து விட்டது.   நதியா பாடுவாங்களே "சின்னக் குயில் பாடும் பாட்டு கேக்குதா" இது வைக்கலாமானு யோசிச்சா, "நீ என்ன பாட்டு பாடறத பத்தியா எழுதப் போற?" மனம் என்னை கேலி செய்தது.  அதை அடக்கிவிட்டு யோசித்த போது, தோன்றிய  பாடல் "ரெக்கை கட்டி பறக்குது அண்ணாமலை சைக்கிள்."  அடடடடா!இது  ரொம்ப சூப்பரா இருக்கே.  இந்த தலைப்ப வைச்சு எழுதறதுக்காகவாது நம்ம சைக்கிள் கத்துண்டே ஆகணும்னு தீர்மானம் பண்ணிட்டேன்.  ஆக நான் விடாப்பிடியா நான் சைக்கிள் கத்துண்டதுக்கு முக்கிய காரணம் ரஜினி சார் தான்!!!

மூணாவது நாள், எப்பவுமே காலியா இருக்கும் பார்க்கிங் லாட்ல அன்னிக்கு ஒரு கார்.  அந்த கார பாத்ததுமே டென்ஷன் ஆயிட்டேன்.  என் சைக்கிள் அதுக்கு மேல.  எப்டி ஓட்டினாலும்  அந்த கார் பக்கமே போவுது.  ஒவ்வொரு முறையும் அந்த கார்கிட்ட போற  சைக்கிள  திசை திருப்பி ஒட்டறதுக்குள்ள பெண்டு நிமிந்து போச்சு.  நம்ம தான் சைக்கிள் ஒட்டறோம்னு தெரியுதில்ல, யார் இங்க கார் வைச்சுதுனு அந்த முகம் தெரியாத நபர திட்ட ஆரம்பிக்கவும், அந்த நபர்  தப தபனு ஓடி வந்து கார எடுக்கவும் சரியா இருந்தது.  முகத்துல ஒரு துளி சிரிப்பக் காணும்.  நான் தான் கார் மேல இடிக்கல இல்ல,  கொஞ்சம் பாத்து சிரிச்சுட்டுப் போனா தான் என்ன? ஹும்.... பிறகு நேரமின்மை காரணமாக  அத்துடன் சைக்கிள் ஓட்டும் பணி தடைப்பட்டது.

நாலாவது நாள்,  எக்கச்சக்க starting trouble இருந்தாலும், கொஞ்சம் தள்ளி விட்டதும் நல்லாவே ஒட்டிட்டேன்.  முதல் முதல்ல நம்மளாவே தனியா ஒட்டறது ஒரு இனிமையான அனுபவம்.  ஆஹா,நல்ல வேளை நம்ம கீழ விழாம கத்துண்டோமேனு நினைச்ச நேரம், நான் கீழ விழுந்து, சைக்கிள் என் மேல விழுந்து,, சுத்திண்டு இருக்கற front wheelல எங்கம்மா திட்டிண்டே("நீ பாட்டுக்கு சைக்கிள் ஓட்டறேனு கால உடைச்சுண்டு ஹாஸ்பிட்டல படுத்துண்டா, பசங்களையும், அவரையும் யார் பாத்துக்கறது?") காட்சி கொடுத்தா.back wheelஅ எங்கப்பா.  of course எங்கப்பாவும் தான்  நல்ல திட்டினா, ஆனா எங்கப்பா கைல "nebasulf" இருந்தது! ஆனா கொஞ்சம் பயந்து தான் போயிட்டேன்.  ஓட்டினது போறும்,இத்தோட  நிப்பாட்டிடலாமானு யோசிச்சுண்டு இருக்குப் போது, "ரெக்கை கட்டி பறக்குது" ஞாபகம் வந்துடுத்து.  உடனே துள்ளி எழுந்துண்ட்டேன்(அவர் தயவால தான்) இல்ல. நான் அப்பவே சொன்ன மாதிரி, ரஜினி சார் இல்லாட்டா.......

அஞ்சாவது நாள், வாத்தியார் சொல்லிக் கொடுக்க வரவே மாட்டேனிட்டார்.  எப்படி எல்லாமோ கெஞ்சி பாத்தேன்.  ரஜினி பத்தி பேச மாட்டேன், எங்கப்பா பத்தி பேசமாட்டேன்,  சொல்ற படி கேக்கறேன், கத்திரிக்காய் சாப்படறேன்..ஹும் ஹூம்....ஒண்ணும் வேலைக்கு ஆகலை.  ஆனாலும் இவ்வளவு கோவம் கூடாது, எல்லாம் இந்த இயற்கைக்கு தான்.  வெளில பேய் மழை.

ஆறாவது நாள்லேந்து பத்தாவது நாள் வரைக்கும், starting trouble.  தள்ளிவிட்டா தான் வண்டி ஓடுதே தவிர என்னால தனியா ஓட்டவே முடியலை.  சேச்சே, சேச்சே. முக்கால் கிணறு தாண்டியாச்சு, கால் கிணறு தாண்டறதுக்கு எவ்வளவு போராட வேண்டி இருக்கு. என்னிக்கு நம்மளே தனியா ஒட்டறது, பத்து நாளாச்சு கத்துக்கலை, இன்னும் எவ்வளவு நாள்  ஆக போகுதோ தெரியலையேனு மனம் கலங்கி போன எனக்கு, பதினோராவது நாள் ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.  

ஆமா, இன்னிக்கு என்ன பெரிசா கிழிக்கப் போறோம், தள்ளி விட்டா தான் ஓட்டப்போறோம்னு நினைச்சுண்டு நாம் பாட்டுக்கு வண்டிய ஓட்ட.......என்னது என்னது நான் ஓட்டினேனா, நானே ஓட்டினேனா...நம்ப முடியவில்லை,இல்லை, இல்லை.  சந்தோஷத்தில் அவள் துள்ளிக் குதித்தாள்.  அவள் மிதிவண்டி இறக்கைக் கட்டி பறந்ததால் அவள் இறக்கை இல்லாமல் பறந்தாள்.ஆடினாள், பாடினாள், சந்தோஷத்தின் எல்லைக்கே ஓடினாள்....

இன்னும் கொஞ்ஜம் balance வரணும், மேடு பள்ளம் எல்லாம் ஏறி இறங்கி பழகணும், போக வேண்டிய தூரம் எவ்வளோவோ இருக்கு.  இருந்தாலும் ஒரு சைக்கிள இப்ப என்னால ஓட்ட முடியும். ஆஹா...  இத  ஊருக்கு எல்லாம் சொல்ல வேணாம்??

பன்னிரெண்டாவது நாள், மாலை வேளை.  கழற்றி வைக்கப்பட்ட கண்ணாடி மீண்டும்  முகத்தில் ஏறியது. என்னை வேடிக்கைப்  பார்த்த மக்களை நோக்கி,  என் மிதிவண்டி என்னை இட்டுச் சென்றது.    அன்று, மிதிவண்டி ஓட்டத் தெரியாத என்னை மேலும் கீழும் பார்த்த மக்கள், இன்று மிதிவண்டி ஓட்டத் தெரிந்த  என்னை நன்றாக பார்க்கட்டும் என்று மனதில் கூக்குரலிட்டுக் கொண்டு போனால், அன்னிக்குனு பாத்து ஒரு ஈ, காக்கா இல்ல அந்த இடத்துல.  இந்த உலகம் எப்பவும் இப்படி தான்.  நம்ம விழுந்து வாரும்போது வேடிக்கைப் பார்க்கும், தானா எழுந்து நிக்கும் போது காணாம போயிடும்.....அப்படி எல்லாம் இல்ல. நூறு டிகிரி மண்டை காயற வெயில்ல நான் தான் மறை கழண்டு போனேனா, மக்கள் என்ன பண்ணுவாங்க.  சரி, அவங்க குடுத்து வைச்சது அவ்வளவு தான்னு நான்  பாட்டுக்கு வண்டிய ஒரு புதிய பாதைல ஓட்டிண்டு   போனா, அங்க ஒரு இடத்துல.... basketball court.  அட, நமக்கு கூடைப்பந்தே விளையாட தெரியாதே....


ஒண்ணு பத்து வயசுல கத்துண்டுருக்கணும், கத்துக்கலை.  இருவது வயசுல, மிக மிக முக்கியமான பொ றுப்புகள்: ஊர சுத்தணும், அரட்டை அடிக்கணும், (ரங்கனாதன்)தெரு பொறுக்கணும்..எக்சட்ரா, எக்சட்ரா, அதனால அப்பவும் கத்துக்கலை.  முப்பது வயசுல, வீடு என்றும், கணவண்/குழந்தைகள் என்றும், பாசம் என்றும், பந்தம்  என்றும்,  நூறு சொந்தம் வந்து பின்னே கத்துக்க நேரம் எங்கே?கடைசில, இந்த அறுவது வயசுல தான்...சரி வேணாம் . அம்பது வயசுல ....அதுவும் வேணாவா...சரி விடுங்க.  இப்ப வயசா முக்கியம்.  அடுத்த வேலைய பாப்போம்.