ராமா க்ருஷ்ணா கோவிந்தா

நமக்கு மேல ஒருத்தர் இருக்காரே, அவரப் பத்தி எப்படி வேணாலும் எழுதலாம்.  உணர்ச்சி வசப்பட்டு பக்தி ரசம் சொட்ட எழுதலாம், அவரப் பத்தி குற்றப் படிக்கை எழுதலாம், இல்ல நம்ம நண்பரா நினைச்சு மனசுல இருக்கறதெல்லாம் கொட்டி எழுதலாம்.  நான் எப்படி எழுதியிருக்கேன்னா,.....
படிங்க, படிச்சா தான தெரியும்.


சின்ன வயதில்: இந்த  ராமர் கதை  விறுவிறுப்பாவே இல்ல.  கொஞ்சம் "bore"  அடிக்கறது.

வளர்ந்த வயதில்:  ராம நவமிக்கு என்ன ஒண்ணுமே இல்லையே சாப்டறதுக்கு.  ஒரு பானகமும்,  ஒரு நீர்மோரும் தான்.   அடடடா.

மனைவியாய் : பாவம் இந்த ராமரும் சீதையும்.  காட்டுக்குப் போய் சந்தோஷமா இருக்கலாம்னு போனா, அங்க ஒரு பிரிவு.  சரி, நாட்டுக்கு வந்தப்புறமாவது கடைசி வரைக்கும் சேர்ந்து இருக்க முடிஞ்சுதானா, அதுவும் இல்லை.  வாழ்க்கைல சேர்ந்து இருந்த சந்தோஷத்தோட, பிரிந்து இருந்த சோகம் தான் ரெண்டு பேருக்கும் அதிகமா இருந்திருக்கும்.

அம்மாவாய்:  ராமர் மாதிரி ஒரு பையன் கிடைக்கறதுக்கு  குடுத்து வைச்சுருக்கணும்.  அம்மா, அப்பா சொல்ற பேச்சுக்கு எதிர் பேச்சு இல்லை.  "காட்டுக்குப் போ" அப்டினு சொன்னதும், "எதுக்குக் காட்டுக்குப் போகணும், அங்க என்ன இருக்கும் சாப்ட, இப்ப போமுடியாது,  பத்து நாள் கழிச்சுப் போறேன், காட்டுக்குப் போகணும்னு ஆசைப்பட்டா நீ போ  நான் போமுடியாது, ," இந்த மாதிரி எந்த பேச்சும் பேசாம், அப்பா  சொன்ன வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து, காட்டுக்குப் போன ராமர், really GREAT.

குசினி அறைப் பெண்ணாய்: என்ன தான் அரசக் குலத்துலப் பிறந்தாலும் ரொம்ப ஆடம்பரமா தன் பிறந்த நாளைக் கொண்டாடாம,  சின்னதா ஒரு பானகம், ஒரு நீர் மோர் அத்தோட பிறந்த நாளை முடிச்சுண்டார்.  நமக்கு கஷ்டம் கொடுக்காத ராமருக்கு ஆயிரம் கோடி நன்றி சொல்லணும்.

எக்குத்தப்பாய்:  ராமருக்குப் பதில் கிருஷ்ணர் இருந்தா என்ன ஆயிருக்கும்.  பதினான்கு வருடங்கள் காட்டுக்குப் போன்னா, போயிருக்க மாட்டார்.  ஏன்னா,
      " வருடங்களோ, மாதங்களோ, நாட்களோ எனக்குக் கிடையாது.  மேலும் நான் எங்கு
       இருக்கிறேனோ அது தான் நகரம், அது தான் காடு."

வியப்பாய்:  சின்ன வயசுல ராமர் கூனியோட முதுகுல அம்பு எய்து விளையாடினாராம்.  ராமரா அப்டி பண்ணார், can't believe.





 சின்ன வயதில்: இந்த கிருஷ்ணர் கதை எவ்வளவு தடவை கேட்டாலும் அலுக்கலை.  சிறைல பிறந்து, யமுனை வழிவிட்டதுலேந்து , கடைசில கால்ல அம்பு  தைக்கற வரைக்கும் எல்லாமே விறுவிறுனு இருக்கே.

வளர்ந்த வயதில்:  பண்டிகைனா அது "ஶ்ரீ ஜயந்தி" தான்.  எவ்வளவு பட்சணம்: முறுக்கு, சீடை, தட்டை, ரவா லட்டு, வெல்ல சீடை, பொரிவிளாங்கா உருண்டை, திரட்டுப் பால்......அப்பப்பா.  என்ன , வருஷத்துக்கு ஒரு தடவை தான் "ஶ்ரீ ஜயந்தி" வருது.

மனைவியாய்:  க்ருஷ்ணருக்கு எவ்வளவு தேவிமார்கள்னு ஆண்டாள் சொல்றா " பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப," .....ஒரு வாழ்க்கைத் துணையே  என்ன நினைக்கறா(ர்), என்ன பேசறா(ர்), என்ன செய்யறா(ர்) எதுவும் பாதி சமயம் புரியலை.  இதுல பதினாறாமாயிரம் தேவிகளோட எப்படி தான் காலம் தள்ளினாரோ?

அம்மாவாய் :  அப்பப்பா... இந்த குழந்தை என்ன விஷமம் பண்றது? ஒரு நிமிஷம் ஒரு இடத்துல இல்ல.  இங்க ஒடறது, அங்க ஒடறது,  வெண்ணைய திருடி சாப்டறது, மோர் குடத்தை உருட்டறது, போறாதுக்கு மண்ண வேற வாயில போட்டுக்கறது.  ரொம்ப விஷமம் பண்றதேனு கட்டிப் போட்டா, கட்டிப் போட்ட உரலோட கூட எங்கயோ போறது.  எப்டி தான்  யசோதா   பாத்துண்டாளோ தெரியலை?

குசினி அறைப் பெண்ணாய்:  எவ்வளவு பெரிய பண்டிகை இந்த "ஶ்ரீ ஜயந்தி". முறுக்கு, சீடை, தட்டை, ரவா லட்டு, வெல்ல சீடை, பொரிவிளாங்கா உருண்டை, திரட்டுப் பால்னு எவ்வளவு பட்சணம் பண்ண வேண்டிருக்கு.  அங்க ஒருத்தர் ஆடம்பரமில்லாம பிறந்த நாள் கொண்டாடறார்.  இங்க இவர் என்னடானா....?

எக்குத்தப்பாய்:  க்ருஷ்ணருக்குப் பதில் ராமர் இருந்தா

"அர்ஜூனா, பீஷ்மர் உன் தாத்தா, துரோணர் உன் குரு, துரியோதனாதிகள் உன் சொந்தம்.  இவர்களோடு போரிட்டு உனக்கு இந்த ராஜ்ஜியம் தேவையா? "

வியப்பாய்:  ஒரு பக்கம் வஸ்த்ராபரணம், இன்னொறு பக்கம் வஸ்த்ரதானம்.  Too contradicting.





சின்ன வயதில்:  ஏன் இந்தக் கோவில்ல மட்டும் இவ்வளவு கூட்டம்?


வளர்ந்த வயதில்:  இவர சேவிச்சுட்டு வரும்போது, அந்த கூண்டுல குடுக்கற அந்த குட்டி குட்டி லட்டு ஜோரா இருக்கே.

மனைவியாய்:  ஒருத்தர், மனைவிய விட்டு அப்பப பிரிஞ்சு இருக்கார்.  இன்னொருத்தர், எந்த நிமிஷம் எங்க இருக்கார் தெரியலை.  யோசிச்சா Mrs. Alamelu Srinivasan.  அவர் தனியா, தான் தனியா இருக்கறதனால தான் ப்ரச்சனையே.  அதனால எப்பவுமே சேர்ந்தே இருப்போம் அவரோட திருமார்புல குடி வந்துட்டா.  அவர் போற இடத்துக்கு எல்லாம் அவளும் போவா, அவள் போற இடத்துக்கெல்லாம் அவரும் போகணும்!!

அம்மாவாய்:  நம்ம வீட்டுப் பசங்களல கார்த்தால "எழுந்துறு எழுந்துறு"னு சுப்ரபாதாம் பாடி எழுப்பறதுக்குள்ள போறும் போறும்னு இருக்கு.  நல்ல வேளை, இவருக்கு சுப்ரபாதம்
 
             "கொளசல்யா சுப்ரஜா ராமா பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே,"

அப்டினு ராமர எழுப்பறது.  அவர் தான் சமத்துப் பிள்ளையாச்சே, எழுப்பின அடுத்த நிமிஷம் எழுந்துண்டுருவார்.  இதுவே

         "தேவகி சுப்ரஜா க்ருஷ்ணா பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே,"

அப்டினு இருந்தா, அந்த பிள்ளை தானும் எழுந்துக்காது, நம்மளையும் சேத்து தூங்க வைச்சுடும்.

குசினி அறைப் பெண்ணாய்:  இவருக்கு ஒண்ணும் நம்ம special ஆ எதுவும்  பண்றதில்லை. ஆனா ஏதாவது ஒண்ணு நமக்கு  கஷ்டம் வந்த்துனா இவர் கால்ல தான் போய் விழறோம்.  அமுது படைப்பது அவர்களுக்கு, அழுது புலம்புவது இவருக்கு.

எக்குத்தப்பாய்:  Meditation, Meditation அப்டிங்றாங்களே, அந்த Meditation ஓட Visual Effectஅ திருப்பதில பாக்கலாம்.   சும்மா இருக்குப் போதுகூட நம்ம எண்ணங்கள் அவ்வளவு அலைபாயாது.  ஆனா கண்ண மூடி ரெண்டு நிமிஷம் இருக்கறதுக்குள்ள , எவ்வளவு எண்ணங்கள் அலை பாயுது.   திருப்பதில நம்மள நாலா பக்கமும் நெரிக்கற மக்கள் கூட்டம் தான் நம் எண்ணங்கள்.  தியானத்துல அந்த எண்ணங்கள கடந்தா கடைசியா எதோ  கிடைக்குங்கறாங்க.  திருப்பதிலயும் கூட்ட நெரிசல கடந்து போனா, நம்ம தேடிப் போனது கிடைக்கும்.

வியப்பாய்:  "ராமா க்ருஷ்ணா கோவிந்தா" தலைப்புப் போட்டு ஒரு வாரம் ஆச்சு.  கற்பனைக் குதிரை ஒடவே இல்லை.  சண்டிக் குதிரையாயிடுத்து.  ராமருக்கும், க்ருஷ்ணருக்கும் எதோ எழுதி சமாளிக்கலாம், கோவிந்தனுக்கு என்ன எழுதறது, நமக்கு ஒண்ணுமே தெரியாதே.  சரி, அப்படியே எழுதினாலும் Headingஅ எப்படி கடைசில கொண்டு வரது, தெரியலையே. இது ஒண்ணும் ஆவறதில்லை, நம்ம எழுதி கிழிச்சது போறும்னு நினைச்சு, கணிணிய மூடி வைச்சது ஞாபகம் இருக்கு.  அப்புறம் எப்படி எழுதினேங்கறது தெரியல.  Must have had a little help from
"ராமா க்ருஷ்ணா கோவிந்தா."